web log free
October 23, 2025

திடுக்கிடும் இரகசியங்களை வெளியிடும் பொன்சேகா!

நாட்டில் இறுதியாக இடம்பெற்ற யுத்தத்தில், இசைப்பிரியா கொல்லப்படுவதற்கு காரணமாகவிருந்தோரை பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா அம்பலப்படுத்தியுள்ளார்.

இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சரத் பொன்சேகா கடந்த நாட்களில் பல சர்ச்சைக்குரிய தகவல்களை வெளியிட்டு வருகின்ற நிலையிலேயே, வெள்ளைக் கொடி சம்பவம் தொடர்பிலும் பரபரப்பான கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் மேலும் தெரிவிக்கையில்;

நான், இராணுவத் தளபதியாக கடமையாற்றியபோது பெரும் தொகையான மக்கள் சரணடைந்தனர்.

சரணடைந்த பொது மக்களுடன் தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள் 12,000 பேரும் சரணடைந்தனர்.

ஆனால், சிலர் கடத்தப்பட்டு கொல்லப்பட்டதாக இரு முறைப்பாடுகள் கிடைத்திருந்தன. இசைப்பிரியா தொடர்பிலும் முறைப்பாடுகள் கிடைத்தன. வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் சிலர் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிய வந்தது.

அவர்களில் இசைப்பிரியாவையும் அழைத்து சென்றதாக குற்றச்சாட்டிருந்ததை நான் அறிவேன். அப்போது இராணுவ புலனாய்வு பிரிவின் தலைவராக இருந்த எந்தவிதாரண தொடர்பில் பேசப்பட்டது.

இது தவிர, வவுனியாவுக்கு பொறுப்பாக இருந்த ஜகத் ஜயசூரியவால் பலர் கடத்தப்பட்டதாகவும் பல முரணான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் இராணுவ சிப்பாய்கள் தெரிவித்திருந்தனர்.

அவருக்கு எதிராக இராணுவ நீதிமன்றத்திலும் விசாரணைகள் நடைபெற்று கொண்டிருந்தன. இசைப்பிரியாவின் சம்பவத்தின் போது நான் இராணுவத் தளபதியாக இருக்கவில்லை.

மஹிந்த ராஜபக்‌ஷ தான், அப்போது ஜகத் ஜயசூரியவை இராணுவத் தளபதியாக நிமியமித்தார். அவருக்கு எதிராக பல முறைப்பாடுகள் இருப்பதால் அவரை நியமிக்க வேண்டாம் என்றேன்.

ஆனால், முன்னாள் ஜனாதிபதி சிரித்துக் கொண்டு முரணான செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம் என நியமனம் கடிதம் வழங்கும் போது கூறினார்.

இவை அனைத்துக்கும் கட்டாயம் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்” எனவும் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd