வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவை சுட்டுக் கொன்ற துப்பாக்கிதாரி குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவர் பாதுகாப்புப் படையிலிருந்து தப்பிச் சென்றவர் என சந்தேகிக்கப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர கடந்த புதன்கிழமை (22) பிரதேச சபையின் தலைவரின் உத்தியோகபூர்வ அறையில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்.
தற்போது சபைத்தலைவரின் உடல் மிதிகமையில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கமைய, தெற்கு மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜயலத் அவர்களின் மேற்பார்வையின் கீழ் மாத்தறை பிரிவிற்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வசந்த குமார அவர்களின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, 4 பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 2 குழுக்கள் சி.சி.டி.வி (CCTV) கெமராக்களை பரிசோதிப்பதற்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, இன்று (24) பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலை தொடர்பாக தொலைபேசி தரவுகள் மூலமாகவும் விசாரணைகள் இடம்பெறுவதாகக் குறிப்பிட்டார்.


