web log free
January 08, 2026

இனப்பிரச்சினைக்கு புதிய அரசியல் தீர்வு - ஜனாதிபதி

தமிழ் தேசிய கூட்டமைப்பு விடுத்த கோரிக்கைக்கு அமைவாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் அந்தக் கட்சி பிரதிநிதிகளுக்கும்  இடையிலான சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

மாகாண சபைத் தேர்தல் மற்றும் புதிய அரசியலமைப்பொன்றின் அவசியம் குறித்து இதன் போது ஆராயப்பட்டதோடு, வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தொடர்ந்தும் பழைய அரசியல் தீர்வு  பொருத்தமற்றது என்பதால் அதற்காக புதிய அரசியல் தீர்வை நோக்கிச் செல்ல வேண்டுமென அரசாங்கம் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இங்கு குறிப்பிட்டார். அதற்காக அனைவரின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் ஜனாபதி தெரிவித்தார்.

வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் நீண்ட காலமாக பிரதேச மட்டத்தில் எதிர்கொள்ளும் மீன்படி மற்றும் காணி பிரச்சினைகள்,உட்கட்டமைப்பு வசதி மற்றும் அபிவிருத்தி தேவைகள் என்பன குறித்தும் இதன் போது ஆராயப்பட்டது. பிரதிநிதிகள் முன்வைத்த சில பிரச்சினைகளுக்கு எதிர்காலத்தில் தீர்வு பெற்றுக் கொடுக்குமாறு அதே சந்தர்ப்பத்தில் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்

வடக்கு அபிவிருத்திக்காக அரசாங்கம்  முன்னெடுக்கும் எந்தவொரு திட்டத்திற்கும் தமது கட்சி ஒத்துழைப்பு வழங்கும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரதிநிதிகள் இந்த சந்திப்பில் சுட்டிக்காட்டினர்.

அத்தோடு, இனவாதத்திற்கு எதிராக அரசாங்கம் மேற்கொள்ளும் எந்தவொரு தீர்மானத்திற்கும் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சி என்ற வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக உள்ளது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் இங்கு சுட்டிக்காட்டினார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தி  சி.வி.கே. சிவஞானம் பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ். ஸ்ரீ தரன், எஸ். ராசமாணிக்கம், பி. சத்தியலிங்கம், ஜி. ஸ்ரீ நேசன்,ரீ. ரவிகரன், கே. கோடீஸ்வரன், கே. எஸ். குகதாசன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன்,  ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத்  குமாநாயக்க, ஜனாதிபதியின் சிரேஸ்ட மேலதிகச் செயலாளர் ரோஷன் கமகே ஆகியோரும் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd