தித்வா’ சூறாவளியால் ஏற்பட்ட அழிவுகளிலிருந்து நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப உருவாக்கப்பட்டுள்ள ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு வெளிநாட்டில் தொழில்புரியும் 19,000 க்கும் மேற்பட்டோர் நிதியை வைப்பிலிட்டுள்ளதாக நிதி,திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்தார்.
நிதி அமைச்சின் செயலாளர் விடுத்துள்ள விசேட அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது;
சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளோருக்கு நிவாரணங்களை வழங்கும் அரசாங்கத்தின் சேவைகளைத் தொடர்ந்து, வெளிநாடுகளில் உள்ளோரும் இவ்வாறான உதவிகளை வழங்க அனுமதிக்குமாறு கோரியிருந்தனர். இதையடுத்து,நிதியமைச்சு மற்றும் ஏனைய அரச நிறுவனங்களினது ஒருங்கிணைப்பில் தற்போது இரண்டு வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. முதலாவது திட்டமாக வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களிடமிருந்து பெறப்படும் நிதி உதவியைப் பெறுவதற்காக இலங்கை வங்கியில் ஒரு சிறப்புக் கணக்கு இலக்கம் அறிவிக்கப்பட்டது.இக்கணக்கிற்கு இதுவரை 19,000 இற்கும் மேற்பட்டோர் பணத்தை வைப்பிலிட்டுள்ளனர்.இரண்டாவது வேலைத்திட்டத்தின் கீழ்,நாட்டிற்கு பொருட்களை அனுப்புபவர்களுக்கு குறைந்த ஆவணங்கள் மற்றும் எந்த கட்டணமுமமின்றி பொருட்களை அனுப்பும் செயல்முறை இலகுபடுத்தப்பட்டுள்ளது.
இத்தகைய பொருட்களுக்கு விதிக்கப்படும் தீர்வை வரி மற்றும் கட்டணங்கள் நீக்கப்பட்டுள்ளன.இந்த வேலைத்திட்டத்தை துரிதப்படுத்துவதற்காக சுங்க பணிப்பாளர் நாயகத்தின் தலைமையில் செயலணி நிறுவப்பட்டுள்ளது.


