web log free
February 11, 2026

வானிலை மாற்றம் குறித்த அறிவிப்பு

டிசம்பர் 29 ஆம் திகதி முதல் நாடு முழுவதும் கிழக்கிலிருந்தான மாறுபட்ட அலை காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுவதால், டிசம்பர் 29 முதல் சில நாட்களுக்கு நாட்டின் வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய, வடமத்திய மாகாணங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிடும் எதிர்கால முன்னறிவிப்புகள் மற்றும் எச்சரிக்கைகள் தொடர்பில் பொதுமக்கள் கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இன்றையதினம் (27) நாட்டின் வடக்கு, கிழக்கு, ஊவா மாகாணங்களிலும், பொலன்னறுவை, மாத்தளை, நுவரெலியா மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

காலி, மாத்தறை, இரத்தினபுரி, களுத்துறை மாவட்டங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுகள், வட மாகாணம் மற்றும் அம்பாந்தோட்டை, மொணராகலை மாவட்டங்களில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40 கி.மீ. வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.

மேல், சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும் பதுளை, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழையின் போதான பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd