web log free
December 30, 2025

தொடரும் குண்டுப் புரளி!

நாவலப்பிட்டி, பஸ்பாகே கோரளை பிரதேச செயலகத்தின் களஞ்சிய அறையில் குண்டு இருப்பதாக அந்த அலுவலகத்தின் மின்னஞ்சலுக்கு செய்தி ஒன்று கிடைத்துள்ளது. 

இந்தச் செய்தியையடுத்து, குறித்த பிரதேச செயலகத்தின் களஞ்சிய அறை உள்ளிட்ட வளாகம் அவசர சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 

பஸ்பாகே கோரளை பிரதேச செயலாளர் ரம்யா ஜயசுந்தரவுக்கு வெளிநாட்டிலிருந்து குறித்த மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. 

அதில், "கூடாரத்திற்குள் குண்டு ஒன்று உள்ளது. அது 29 பிற்பகல் 2:00 மணிக்கு வெடிக்கும்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. 

இதனால் உடனடியாக செயற்பட்ட பிரதேச செயலாளர், அலுவலக ஊழியர்கள் மற்றும் அங்கு வருகை தந்திருந்த பொதுமக்களை வெளியேற்றி பாதுகாப்புப் பிரிவினருக்கு அறிவித்தார். 

நாவலப்பிட்டி பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படை, இராணுவக் குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவு மற்றும் மோப்ப நாய் பிரிவினரின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்ட சோதனையில் சந்தேகத்திற்கிடமான எந்த பொருளும் கண்டறியப்படவில்லை. 

அந்த இடத்திற்கு சென்ற கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துஷாரி ஜயசிங்கவும் நிலைமைகளை ஆராய்ந்தார். 

இதேவேளை, பூஜப்பிட்டிய பிரதேச செயலகத்திற்கு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாகக் கிடைத்த மின்னஞ்சல் போலியானது என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பூஜப்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

எனினும், அந்த அலுவலகத்திற்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

காலை அலுவலகம் திறக்கப்பட்ட போதே அதிகாரிகள் இந்த மின்னஞ்சலை அவதானித்துள்ளனர். 

அதில் பிற்பகல் 2:00 மணிக்கு முன்னர் அதிகாரிகளை வெளியேறுமாறு எச்சரிக்கப்பட்டிருந்தது. இது குறித்து பொலிஸாருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டை தொடர்ந்து, விசேட அதிரடிப்படையினர் மற்றும் குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினர் சுமார் 4 மணிநேரம் சோதனை நடத்திய போதிலும் சந்தேகத்திற்கிடமான எந்தபொருளும் கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd