அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் மின்சார கட்டணத்தை மூன்றில் ஒரு பங்கு (1/3) அளவுக்கு குறைக்கும் இலக்கை அரசு உறுதியுடன் முன்னெடுத்து வருவதாக மின்சாரம் மற்றும் ஆற்றல் அமைச்சர் குமார ஜயகொடி தெரிவித்துள்ளார்.
நேற்று (06) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர், 2024 ஆம் ஆண்டில் ஒரு மின்சார அலகின் சராசரி செலவு ரூபாய் 37 ஆக இருந்த நிலையில், தற்போது அதனை ரூபாய் 29 ஆகக் குறைக்க அரசு வெற்றி பெற்றுள்ளதாக கூறினார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், அரசின் அடுத்த இலக்கு ஒரு மின்சார அலகின் செலவை ரூபாய் 25 ஆகக் குறைப்பதே என தெரிவித்தார். அந்த இலக்கை அடைய முடிந்தால், மொத்த மின்சார கட்டணத்தை சுமார் 32 சதவீதம் வரை குறைக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
2024 ஜூலை மாதத்தில் ஒரு மின்சார அலகின் செலவு ரூபாய் 37 ஆக இருந்த காலப்பகுதியில், மூன்று ஆண்டுகளுக்குள் மின்சார கட்டணத்தை 30 சதவீதம் குறைப்பதாக தேசிய மக்கள் சக்தி (NPP) வழங்கிய உறுதிமொழியின் அடிப்படையிலேயே தற்போதைய அரசு செயல்பட்டு வருவதாகவும் அமைச்சர் நினைவூட்டினார்.
இதேவேளை, 2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டுக்காக எதிர்பார்க்கப்படும் ரூபாய் 13,094 மில்லியன் நிதி பற்றாக்குறையை ஈடு செய்யும் நோக்கில், மின்சார கட்டணத்தை 11.57 சதவீதம் உயர்த்த இலங்கை மின்சார சபை (CEB) முன்மொழிவு செய்துள்ளதாகவும் அவர் நாடாளுமன்றத்துக்கு அறிவித்தார்.
மேலும், உலக சந்தை நிலவரத்தை கருத்தில் கொண்டு எரிபொருளை துறைமுகத்தில் இறக்குமதி செய்யும் விலைக்கு வழங்க முடியாது என்றும், நாட்டிற்குள் விநியோகிப்பதற்கு அதிக செலவு ஏற்படுவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். இந்த அடிப்படை உண்மைகள் குறித்த சாதாரண அறிவு கூட இல்லாமல் எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பியதாகவும் குமார ஜயகொடி விமர்சனம் செய்தார்.


