சந்தையில் பாம் எண்ணெய் விலை உயர்வும், அதேசமயம் தட்டுப்பாடும் நிலவுவதாக பேக்கரி உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இலங்கையில் பேக்கரி உற்பத்திகளுக்காக பெரும்பாலானோர் பாம் எண்ணெயையே பயன்படுத்துகின்றனர். வெளிநாடுகளிலிருந்து பாம் எண்ணெயை இறக்குமதி செய்து விநியோகிப்பது நான்கு பெரிய அளவிலான வணிகர்களால் மேற்கொள்ளப்படுவதாக அவர்கள் கூறுகின்றனர்.
சந்தையில் முன்பு கிலோ ஒன்றிற்கு ரூ. 770 ஆக இருந்த பாம் எண்ணெய், தற்போது ரூ. 870 வரை உயர்ந்துள்ளதாக பேக்கரி உற்பத்தியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
பாம் எண்ணெய் விலை உயர்வுக்கு இணையாக தேங்காய் எண்ணெய் விலையும் சுமார் ரூ. 20 அளவில் அதிகரித்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
பாம் எண்ணெய்க்கு மாற்றாக சில பேக்கரி உற்பத்தியாளர்கள் சூரியகாந்தி (Sunflower) எண்ணெயை பயன்படுத்தி வந்தாலும், தற்போது சந்தையில் சூரியகாந்தி எண்ணெயும் கிடைப்பதில் சிரமம் உள்ளதாக கூறப்படுகிறது.
இவ்வாறு பாம் எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் விலை உயர்ந்துள்ளதுடன், சூரியகாந்தி எண்ணெய் தட்டுப்பாடும் நிலவுகின்ற நிலையில், தேங்காய் மொத்த விலை ரூ. 20 அளவில் குறைந்திருப்பது ஆச்சரியமளிப்பதாக பேக்கரி உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.


