நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 9ஆவது நிலக்கரி கப்பலும் தரமற்றதாக இருப்பது தரவுகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
தற்போது நுரைசோலை அனல் மின் நிலையத்தின் முதல் மற்றும் மூன்றாவது மின் உற்பத்தி இயந்திரங்கள் தலா 300 மெகாவாட் உற்பத்தி செய்ய வேண்டிய நிலையில், அவை முறையே சுமார் 250 மற்றும் 265 மெகாவாட் மட்டுமே உற்பத்தி செய்கின்றன என்றும், இரண்டாவது இயந்திரம் மட்டும் 300 மெகாவாட் முழுத்திறனில் செயல்படுகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இரண்டாவது மின் உற்பத்தி இயந்திரத்தில் பயன்படுத்தப்படுவது முந்தைய டெண்டரின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட ரஷ்ய நிலக்கரி எனவும், முதல் மற்றும் மூன்றாவது இயந்திரங்களில் பயன்படுத்தப்படுவது தென் ஆப்பிரிக்காவில் இருந்து கொண்டுவரப்பட்ட தரமற்ற நிலக்கரி எனவும் எதிர்க்கட்சித் தலைவர் வெளிப்படுத்தினார்.
அரசு தென் ஆப்பிரிக்காவிலிருந்து சுமார் 25–27 நிலக்கரி கப்பல்களை ஆர்டர் செய்துள்ளதாகவும், இதுவரை இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியும் தரமற்றதாக இருப்பதாகவும் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டினார்.
இலங்கை மின்சார சபை கணக்கீட்டின்படி, முதல் எட்டு நிலக்கரி கப்பல்கள் தரமற்றதாக இருந்ததன் காரணமாக ஏற்பட்ட நேரடி நட்டம் ரூ. 7,672.1 மில்லியன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



