மத்திய வங்கி பிணை முறி பத்திர மோசடி விவகாரம் தொடர்பாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை சிங்கப்பூரிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தி (Extradition) கொண்டு வர அரசாங்கம் தற்போது செயற்பாட்டு ரீதியான தூதரக தலையீட்டை ஆரம்பித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான நலிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்தார்.
ஆனால், ஒருவரை வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு கொண்டு வருவது எளிய செயல்முறை அல்ல என்றும், அதற்காக பின்பற்ற வேண்டிய சிக்கலான சட்ட நடைமுறைகள் உள்ளன என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போது அவர் இதனை தெரிவித்தார்.
அங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் கூறியதாவது:
“அர்ஜுன மஹேந்திரனுக்கு எதிரான வழக்குகள் அவர் நாட்டில் இல்லாவிட்டாலும் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன. அதேபோல், அவரை விரைவாக இலங்கைக்கு கொண்டு வர தேவையான தூதரக நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அவர் இங்கே இருப்பாரா இல்லையா என்பது பொருட்டல்ல; நீதிமன்ற செயல்முறை நிறுத்தப்படாது.”
மேலும், பத்திர மோசடி தொடர்பாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட எந்த நபருக்கும் சட்டத்திலிருந்து தப்பிச் செல்ல இடமளிக்கப்படாது என்றும், பொறுப்புடைய அனைவரையும் நீதிமன்றத்திற்கு முன்னிலைப்படுத்துவது அரசின் நிலைப்பாடான கொள்கை என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.



