web log free
March 11, 2026

எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துங்கள்

மத்திய கிழக்கில் நடந்து வரும் மோதல்களால் எழுந்துள்ள எரிசக்தி சவால்களைக் கருத்தில் கொண்டு, அத்தியாவசியமற்ற பயணங்களைக் குறைத்து, எரிபொருளை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) தலைவர் டி.ஜே. ராஜகருணா பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார்.

இன்று (10) ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட ராஜகருணா, தற்போதைய நிலைமை மிகவும் தீவிரமானது என்றும், உலகளாவிய நிலைமைகள் சீராகும் வரை நாட்டுமக்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் எச்சரித்தார்.

"இது ஒரு சாதாரண சூழ்நிலை அல்ல; இது மிகவும் மோசமான நிலை" என்று அவர் கூறினார், பயணத்தை கட்டுப்படுத்துவதன் மூலமும், அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே எரிபொருளை வாங்குவதன் மூலமும், குறைந்த அளவிலான எரிபொருள் பயன்பாட்டை பேணுவதன் மூலமும் நெருக்கடியை நிர்வகிக்க கூட்டாக உதவுமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட எரிபொருள் பீதியால் மக்கள் அதிகரித்த கொள்னவு எரிபொருள் விலை உயர்வுக்கு காரணம் என அவர் குறிப்பிட்டார்.

இவ்வாறு கொள்வனவாலும், எரிபொருளை பதுக்கி வைத்தல் காரணமாக , குறைந்த விலையில் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருள் கையிருப்பு திட்டமிட்ட நேரத்திற்கு முன்பே தீர்ந்துவிட்டதாகவும் , இதன் விளைவாக, எரிபொருள் விலை திருத்தத்தை விரைவுபடுத்த வேண்டியிருந்தது என்றும் தெரிவித்தார்.

இவ்வளவு பெரிய கொள்முதல் நடக்கவில்லை என்றால், குறைந்தபட்சம் இந்த மாத இறுதி வரை முன்னைய எரிபொருள் விலையை அதிகாரிகள் பராமரிக்க முடிந்திருக்கலாம் என்று அவர் மேலும் கூறினார்.

தற்போது நாட்டிற்கு வரும் எரிபொருள் கப்பல்களுக்கான கொடுப்பனவுகள், இறக்கும் நேரத்தில் நிலவும் ஐந்து நாள் சராசரி உலக சந்தை விலையின் அடிப்படையில் செய்யப்படுவதால், புதிதாக வழங்கப்படும் எரிபொருளின் விலை அதிகமாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

எனவே நாட்டின் எரிபொருள் சேமிப்பு வசதிகள் குறைவாக இருப்பதாலும், அதிக அளவு அந்நியச் செலாவணி செலவிடப்படுவதாலும் , தற்போதைய நெருக்கடி நிலை தீரும் வரை அத்தியாவசிய நடவடிக்கைகளுக்கு மட்டுமே எரிபொருளைப் பயன்படுத்துமாறும் , தேவையற்ற பயணங்களைக் கட்டுப்படுத்துமாறும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd