ரூபாவின் மதிப்பிழப்பு மற்றும் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக இலங்கையின் மோட்டார் வாகனத் துறை கடுமையான பின்னடைவுக்கு உள்ளாகியுள்ளது என எச்சரிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் நடைபெற்ற புதிய வாகன அறிமுக நிகழ்வில் பேசிய மோட்டர்ஸ் லங்கா நிறுவனத்தின் தலைவர் மார்கன் தம்பையா இதனை தெரிவித்தார்.
அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு 310 முதல் 320 வரை குறைந்துள்ளதால், வாகன இறக்குமதி செலவுகள் குறிப்பிடத்தக்க அளவில் உயரக்கூடும் என அவர் குறிப்பிட்டார். உதாரணமாக, 30,000 அமெரிக்க டொலர் மதிப்புள்ள ஒரு வாகனத்தின் விலை சுமார் 10 இலட்சம் ரூபாயால் அதிகரிக்கலாம் என்றும் அவர் விளக்கினார்.
மேலும், வாகன இறக்குமதி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டபோது காணப்பட்ட ஆர்வம் தற்போது குறைந்துள்ளது. ஜனவரி மாதத்தில் 55,365 ஆக இருந்த புதிய வாகன பதிவு எண்ணிக்கை, பெப்ரவரி மாதத்தில் 51,682 ஆகக் குறைந்துள்ளது.
அதேபோல், வெளிநாட்டு தொழிலாளர்களின் பணப்பரிமாற்றங்கள் நாட்டின் பொருளாதார நிலைத்தன்மைக்கு மிக முக்கியமானவை. 2025 ஆம் ஆண்டில் 8.076 பில்லியன் அமெரிக்க டொலராக இருந்த இந்த வருவாய், எதிர்காலத்தில் 2 அல்லது 3 பில்லியன் டொலர் அளவுக்கு குறைந்தால் அது பெரிய பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும், எரிபொருள் விலை உயர்வால் மின்சார வாகனங்களின் மீது ஆர்வம் அதிகரித்திருந்தாலும், பேட்டரி மாற்றச் செலவு மற்றும் நடைமுறை சிக்கல்கள் காரணமாக தற்போதைய நிலையில் மக்கள் ஹைபிரிட் (இரட்டை சக்தி) வாகனங்களை அதிகமாக விரும்புகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




