web log free
May 03, 2026

ஒரு ராஜபக்சவை கைது செய்ய சர்வதேச பிடிவிராந்து பிறப்பித்து?

பெரிய அளவிலான மோசடி வழக்கில் குற்றச்சாட்டு எதிர்நோக்கும் ஒரு ராஜபக்ச குடும்ப உறுப்பினர், உடல்நிலை காரணங்களை கூறி நீதிமன்றத்தை தவிர்த்து வருவதாகவும், தேவையானால் சர்வதேச பிடிவிராந்து பிறப்பித்து கைது செய்யப்படும் எனவும் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க எச்சரித்துள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது:

“இந்த மே மாதத்திற்குள் சுமார் 15 குற்றவியல் வழக்குகளுக்கு தீர்ப்புகள் வர இருக்கின்றன. அதனால் குற்றம் செய்தவர்கள் பதற்றமடைந்துள்ளனர். திருட்டு செய்தவர்களுக்குத்தான் அதன் அளவு தெரியும். அதனால் அவர்கள் அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சிப்பதாக பேசுகின்றனர்.

ஆனால் மக்கள் அதற்கு இடமளிக்க மாட்டார்கள். மக்கள் ஆதரவுடன் உருவான இந்த அரசாங்கம், எடுக்கப்படும் ஒவ்வொரு முடிவினாலும் மக்களின் நம்பிக்கையை மேலும் உயர்த்தியுள்ளது.

ஈஸ்டர் தாக்குதல் குறித்து விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. எந்த குற்றமும் காலப்போக்கில் மறைந்து போக அனுமதிக்கப்படாது. அடுத்த சில மாதங்கள், நாட்டில் சட்டத்தின் ஆட்சி உறுதிப்படுத்தப்படும் காலமாக இருக்கும்.

ஊழல் மற்றும் மோசடி செய்தவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் முக்கியமான தீர்ப்புகள் வெளியாக உள்ளன. அது முன்னாள் ஜனாதிபதியா, அவரது உறவினர்களா என்பது எங்களுக்கு பொருட்டல்ல. ஏற்கனவே ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த சிலருக்கு வாரண்டுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

பெரிய மோசடி வழக்கில் உள்ள ஒருவரோ, ‘கழுத்து முறிந்தது, முதுகெலும்பு பாதிக்கப்பட்டது’ எனக் கூறி நீதிமன்றத்தை தவிர்க்கிறார். தேவையானால் Red Notice பிறப்பித்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவோம்.

சிலர் நீதிமன்றங்களுக்கு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தலாம். அவர்கள் விரும்பினால் நடத்தட்டும். ஆனால் நாங்கள் சட்டப்படி செயல்படுவோம். எப்போது வேண்டுமானாலும் இந்த அரசாங்கத்திற்கு ஆதரவாக இலட்சக்கணக்கான மக்கள் தெருவில் இறங்கத் தயாராக உள்ளனர் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்,” என்றார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd