web log free
May 08, 2026

அரசுடன் இணைவது தொடர்பில் ஹர்ஷ கருத்து

சமகி ஜன பலவேகய (SJB) கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஹர்ஷ டி சில்வா, தாம் அரசாங்கத்துடன் இணையத் தயாராக உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பரவி வரும் வதந்திகளை கடுமையாக மறுத்துள்ளார்.

இதுகுறித்து விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்ட அவர், தனது அரசியல் செயல்பாடுகளை தவறாகப் புரிந்து கொண்டு, தனது அரசியல் எதிர்காலம் குறித்து தேவையற்ற வதந்திகளை சில தரப்பினர் பரப்ப முயற்சித்து வருவதாகக் குறிப்பிட்டார்.

அரசாங்கம் தம்முடன் கருத்து பரிமாற்றம் மேற்கொள்ள முயற்சிப்பது நேர்மறையான விடயமாக இருந்தாலும், தாம் எப்போதும் சுயாதீனமான அரசியல் அணுகுமுறையையே பின்பற்றி வருவதாக அவர் வலியுறுத்தினார்.

“சரி என்றால் சரி என்றும், தவறு என்றால் தவறு என்றும் வெளிப்படையாகக் கூறுவதே என் அரசியல் கொள்கை” என அவர் மேலும் தெரிவித்தார்.

நாடாளுமன்ற அரசாங்க நிதி தொடர்பான குழுவின் (COPF) தலைவராக தாம் செயல்படும் விதம் குறித்து சிலர் அதிருப்தியில் உள்ளதாகவும் அவர் கூறினார்.

அந்தக் குழுவின் நடவடிக்கைகளை வெளிப்படைத்தன்மையுடன் முன்னெடுத்து செல்வது சில தரப்பினருக்கு சிரமமாக இருப்பதாகவும், அதுவும் இத்தகைய வதந்திகள் உருவாக காரணமாக இருக்கலாம் என்றும் ஹர்ஷ டி சில்வா சுட்டிக்காட்டினார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd