web log free
May 09, 2026

மதவாதத்தை தூண்டும் ஹரின் பெனாண்டோ

இதுவரை பதுளை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் அமைச்சர் ஹரின் பெனாண்டோ, தற்போது வத்தளை தொகுதியை மையமாகக் கொண்டு தனது அரசியல் நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிக்க முயற்சிக்கும் நிலையில், மதவாதத்தை தூண்டும் வகையிலான பொய்யான தகவல்களை சமூகத்தில் பரப்பி வருகிறார் என இலங்கை ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

1960ஆம் ஆண்டு பாடசாலைகளை அரசுடமையாக்கிய சட்ட ஏற்பாடுகளின் கீழ் அரசிற்கு ஒப்படைக்கப்பட்ட பாடசாலைகளில், அதற்குரிய மதப் பிரிவைச் சேர்ந்தவர்களையே அதிபர்களாக நியமிக்க வேண்டும் என்ற எந்த சட்டப் பிரிவும் இல்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த நிலையில், வத்தளை நாயக்ககந்த யஹபத் எடேராகே மகளிர் மகா வித்தியாலயத்திற்கு கத்தோலிக்கர் அல்லாத ஒருவரை அதிபராக நியமித்துள்ளதாக கூறி, ஹரின் தவறான தகவல்களை பரப்பி மத அடிப்படையிலான கருத்தை உருவாக்க முயற்சித்து வருகிறார் எனவும் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

இந்த கருத்துக்களை ஹரீன் பெர்னாண்டோ கடந்த மே 06ஆம் திகதி N. M. Perera நிலையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது வெளியிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், குறித்த பாடசாலையின் அதிபர் வெற்றிடத்திற்காக முறையாக விண்ணப்பங்கள் கோரப்பட்டு, தகுதிகள் பரிசீலிக்கப்பட்ட பின்னரே அந்த அதிபர் 2026 மார்ச் 12ஆம் திகதி நியமிக்கப்பட்டதாகவும் ஜோசப் ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd