ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் ஐந்து (05) புனைப்பெயர்களைப் பயன்படுத்தியிருப்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும், அந்தப் பெயர்களின் பின்னால் உள்ள உண்மையான நபர்கள் யார் என்பது விரைவில் நாட்டிற்கு வெளிப்படுத்தப்படும் என்றும் பொது பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.
சிரச தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட அவர், இந்தப் புனைப்பெயர்களில் “சோனிக்” (Sonic) என்ற பெயர் குறித்து முன்னதாக நாடாளுமன்றத்தில்கூட விவாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
மேலும், இதற்கு அப்பால் இன்னும் நான்கு புனைப்பெயர்கள் தொடர்பான தகவல்கள் விசாரணைக் குழுக்களிடம் இருப்பதாகவும், அவை தற்போது நடைபெற்று வரும் விசாரணைகளுடன் தொடர்புடையவை என்பதால் மேலதிக விவரங்களை இந்நேரத்தில் வெளியிட முடியாது என்றும் தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தி தேர்தல் காலத்தில் வழங்கிய அரசியல் வாக்குறுதியின்படி, ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை கண்டறிவதற்கான முறையான விசாரணை தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த காலங்களில் இடம்பெறாத வகையில் நியாயமான மற்றும் சுயாதீனமான விசாரணை நடத்தி, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதே அரசாங்கத்தின் முதன்மை நோக்கம் என அவர் வலியுறுத்தினார்.
இந்த விசாரணை நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சியினர் பல்வேறு தடைகளை ஏற்படுத்த முயன்றாலும், சுயாதீன நிறுவனங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் இந்தப் புலனாய்வுகள் எந்த நிலையிலும் நிறுத்தப்பட மாட்டாது என்றும் அவர் தெரிவித்தார்.
உளவுத்துறை அறிக்கைகள் மற்றும் புதிய விசாரணைத் தகவல்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றும், குறித்த புனைப்பெயர்களின் பின்னால் செயல்பட்ட நபர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் சுனில் வடகல மேலும் கூறினார்.


