web log free
June 12, 2026

ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளில் SJB தலையிடாது

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் எந்தவித அரசியல் தலையீடும் இடம்பெறக்கூடாது என்றும், சம்பவத்துடன் தொடர்புடைய உண்மையான குற்றவாளிகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசு மக்களிடம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றி, விசாரணைகளுக்கு இடையூறு செய்யாமல் உண்மையான குற்றவாளிகளை வெளிக்கொணர்ந்து நீதியை நிலைநாட்ட வேண்டும் எனவும் அவர் கூறினார்.

இந்த துயரச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் குறித்து தனது கட்சி ஆரம்பம் முதலே தெளிவான நிலைப்பாட்டில் இருந்து வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

குற்றவாளிகள் யார் என்பதை தீர்மானிப்பது அரசியல்வாதிகளின் பொறுப்பு அல்ல என்றும், அதற்காக சுயாதீனமான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், அந்த விசாரணை செயல்முறைக்கு எந்தவிதத்திலும் தடையாக இருக்க தனது கட்சி தயாரில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்தச் சம்பவத்தை அரசியல் கருவியாக பயன்படுத்தாமல், முறையான விசாரணை நடத்தி குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவது அரசின் பொறுப்பாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd