web log free
April 03, 2025

ஆளுநர்களை சந்தித்தார் ஜனாதிபதி

மக்களுக்கான சேவைகளை முறையாகவும் வினைத்திறனாகவும் வழங்குவதோடு அரசாங்கத்தின் அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்காக அனைத்து புதிய ஆளுநர்களும் நேரடியாக தலையிடுவார்கள் என்று தான் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

இன்று (11) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற ஆளுநர்களுடனான சந்திப்பின்போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மாவட்ட ரீதியாகவும் ஜனாதிபதி செயலகத்தினாலும் செயற்படுத்தப்படும் அபிவிருத்தி செயற்திட்டங்கள் தொடர்பிலும் இந்த சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டது.

பொதுமக்களை பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் மேம்படுத்தி சுபீட்சமிக்க சிறந்த குடிமக்களை உருவாக்கும் நோக்குடன், பல்வேறு விசேட செயற்திட்டங்கள் ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ் ஜனாதிபதி செயலகத்தினால் தற்போது செயற்படுத்தப்படுகின்றது.

நாட்டின் இளைஞர் சமுதாயத்தை போதைப்பொருள் பாவனையிலிருந்து விடுவிப்பதற்கான போதைப்பொருள் ஒழிப்பு தேசிய செயற்திட்டமும் பொதுமக்களை வறுமையிலிருந்து மீட்பதற்கான கிராமசக்தி தேசிய செயற்திட்டமும் அவற்றுள் பிரதானமானவை.

நாட்டின் பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக “சிறுவர்களை பாதுகாப்போம்” தேசிய செயற்திட்டமும் சுற்றாடல் பாதுகாப்பிற்கான சுற்றாடல் பாதுகாப்பு தேசிய செயற்திட்டம், தேசிய உணவு உற்பத்தி செயற்திட்டம், சிறுநீரக நோய் நிவாரண தேசிய செயற்திட்டம் ஆகியன ஜனாதிபதி செயலகத்தினால் நாடளாவிய ரீதியில் செயற்படுத்தப்பட்டுள்ள ஏனைய செயற்திட்டங்களாகும்.

ஜனவரி 21 முதல் 28 வரையான காலப்பகுதி தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன், போதைப்பொருள் பாவனையால் ஏற்படும் சீர்கேடுகள் தொடர்பில் சமூகத்தை விழிப்பூட்டும் பல வேலைத்திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அவற்றுள் பாடசாலை மாணவர்கள், அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்களை இலக்காகக்கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில் உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்த ஜனாதிபதி, அவ் வேலைத்திட்டங்களில் தமது தனிப்பட்ட கவனத்தை செலுத்தி பங்களிப்புகளை வழங்குமாறு ஆளுநர்களிடமும் மாகாண பிரதான செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளிடமும் வேண்டுகோள் விடுத்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, தான் சுகாதார அமைச்சராக பணியாற்றிய காலகட்டத்தில் போதைப்பொருளுக்கு எதிராக தம்மால் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களின் காரணமாக ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் போதைப்பொருட்களுக்கு எதிராக கடுமையான சட்டதிட்டங்கள் காணப்படுவதாக தெரிவித்தார். அத்தகைய சட்டங்களை மேலும் வலுப்படுத்துவதுடன், போதைப்பொருளினால் ஏற்படும் சவால்களை வெற்றிகொள்வதற்காக தனது ஆட்சிக் காலத்திற்குள் சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள தான் தயாராக உள்ளதாக தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் போதைப்பொருள் பாவனை தடுப்புக்காக அரசாங்கத்தினால் பல்வேறு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவற்றின் முன்னேற்றம் தொடர்பாகவும் இக்கலந்துரையாடலின்போது மீளாய்வு செய்யப்பட்டது.

பெப்ரவரி மாதம் 18 முதல் 23ஆம் திகதி வரையான காலத்தை தேசிய கிராமசக்தி வாரமாக பிரகடனம் செய்து 4000 கிராமங்களுக்கு கிராமசக்தி செயற்திட்டத்தை கொண்டு செல்லும் நோக்கத்தோடு பல வேலைத்திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அந்த வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் ஆளுநர்கள் தெளிவுப்படுத்தப்பட்டனர்.

 

Last modified on Wednesday, 11 September 2019 01:34
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd