மூன்று நாட்கள் தனிப்பட்ட விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று பிரித்தானியாவுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று மதியம் அவர் லண்டனுக்கு புறப்பட்டார்.
தனது மகன் தஹம் சிறிசேனவின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கவே ஜனாதிபதி இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில், மூன்று நாட்கள் அவர் பிரித்தானியாவில் தங்கியிருப்பார் என்று தெரியவருகிறது.
முன்னதாக, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தனவை, பதில் பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி, நேற்று நியமித்துள்ளார்.
தாம் நாட்டில் இல்லாத போது, பதில் பாதுகாப்பு அமைச்சராக செயற்படுவதற்கு ருவன் விஜேவர்த்தனவுக்கு ஜனாதிபதி அதிகாரம் அளித்துள்ளதாக கூறப்படுகின்றது.
'ஜனாதிபதி புறப்பட்டுச் செல்வதற்கு முன்னர், தொலைபேசியின் தனக்கு அழைப்பை ஏற்படுத்தி, பாதுகாப்பு தொடர்பில் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள்
குறித்து ஆலோசனை வழங்கினார்' என பாதுகாப்பு பதில் அமைச்சர் ருவன் விஜயவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் இடம்பெற்ற ஆசிய கரையோர பாதுகாப்பு பிரதானிகளின் மாநாட்டில் பங்கேற்றதன் பின்னர், ஊடகவியலாளர்கள் எழுப்பிய
கேள்விக்கு பதிலளிக்கும் போதே, ருவன் விஜயவர்தன மேற்கண்டவாறுத் தெரிவித்தார்.