ஜனாதிபதி மற்றும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் இன்று காலை இடம்பெற்ற கலந்துரையாடலில் சுமூகமான தீர்மானங்கள் சில எட்டப்பட்டதாக தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்துசமய விவகார அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இன்று முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் பங்கேற்குமாறு, அனைத்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தகவல் அனுப்பியும் பலர் கலந்துக்கொள்ளவில்லை என்றும் அமைச்சர் மனோ கணேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களாக அரவிந்தகுமார், ஆறுமுகன் தொண்டமான் மற்றும் அமைச்சரவை அந்தஸ்தில்லா அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் ஆகியோர் வெளிநாடு சென்றுள்ளதாக அறிவிக்கப்பட்டதாகவும் அமைச்சர் மனோ குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இந்த கலந்துரையாடலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சர்களான மனோ கணேசன், திகாம்பரம், நாடாளுமன்ற உறுப்பினர்களான திலகராஜ், வேலுகுமார், வியாழேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
அவர்களுடன், தொல்பொருளாராட்சி திணைக்கள பணிப்பாளர் நாயகம் மாண்டாவெல, இந்து சமய கலாசார திணைக்கள பணிப்பாளர் உமா மகேஸ்வரன், அமைச்சர் மனோ கணேசனின் சட்ட ஆலோசகர் சட்டத்தரணி கணேஷ்ராஜா ஆகியோம் பங்கேற்றுள்ளனர்.