web log free
September 20, 2024

3 வருடங்களில் 217,000 நோயாளர்கள்


'சுவசெரிய' என்ற இலவச அம்பியூலன்ஸ் சேவை ஊடாக, கடந்த மூன்று வருடங்களில் 2 இலட்சத்து 17 ஆயிரம் நோயாளர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ராஜகிரியவில் உள்ள சுவசெரிய அம்பியுலென்ஸ் மத்திய நிலையத்தில் இடம்பெற்ற மூன்று வருடங்கள் நிறைவு நிகழ்வில் அமைச்சர் ஹர்ஷ டி சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

கடந்த 3 வருடங்களில் சராசரியாக பார்க்கும் போது நாளொன்றுக்கு 200 நோயாளர்கள் இந்த சேவையின் ஊடாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.

எனினும், தற்போது, சுவசெரிய அம்பியுலென்ஸ் சேவையின் ஊடாக நாளொன்றில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 700 ஆக அதிகரித்திருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

1990 என்ற இந்த சுவசெரிய அம்பியுலென்ஸ் சேவையானது நாட்டில் இன்று காணப்படும் திறமையான சேவை என்று சுட்டிக்காட்டிய அமைச்சர் ஹர்ஷ டி சில்வா, குறித்த சேவையானது ஆகக்குறைந்தது 12 நிமிடங்களில் நோயாளர்களை சென்றடைவதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்திய அரசாங்கத்தின் அன்பளிப்பாக 2016ஆம் ஆண்டு கட்டணமின்றி ஆரம்ப வைத்தியசாலை சிகிச்சை சேவையாக 1990 சுவசெரிய அம்பியுலென்ஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டது.

தற்போது இச்சேவை நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.