web log free
July 02, 2025

வேட்பாளர் குறித்து தீர்மானம் இல்லை - மஹிந்த

 

ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது குறித்து இன்னமும் தீர்மானிக்கவில்லை. எமது பட்டியலில் தற்போது ஐவர் உள்ளடங்கியுள்ளனர். இவர்களில் ஒருவரே ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்படுவார். வெற்றி பெறும் வேட்பாளர் குறித்தும் வெற்றியின் பின்னர் கட்சியின் நலன்குறித்தும் கருத்தில் கொண்டே வேட்பாளரைத் தெரிவு செய்யும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பு தாமரைத் தடாகம் மண்டபத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற அமைதி, சமாதானம் மற்றும் சகவாழ்வுக்கான தேசிய மாநாட்டில் கலந்துகொண்ட எதிர்க்கட்சித் தலைவர் அந்த நிகழ்வில் பங்கேற்ற தமிழ்க் கட்சித் தலைவர் ஒருவருடன் கலந்துரையாடிய போதே இதனை தெரிவித்துள்ளார்.

அந்த தமிழ்க் கட்சியின் தலைவர் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்று கேள்வி எழுப்பிய போது அதற்கு பதிலளித்த மஹிந்த ராஜபக்ச, உண்மையில் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் நாம் இன்னும் முடிவெடுக்கவில்லை. எமது பட்டியலில் ஐவரது பெயர்கள் உள்ளன. மைத்திரிபால சிறிசேன, தினேஷ் குணவர்த்தன, சமல் ராஜபக்ச, கோத்தபாய ராஜபக்ச, குமார வெல்கம ஆகியோரின் பெயர்கள் சிபாரிசு செய்யப்பட்டுள்ளன. இந்த ஐவரில் ஒருவரே வேட்பாளராக நியமிக்கப்படுவார்.

மக்கள் மத்தியில் செல்வாக்கு உள்ளவர் யார் என்பது குறித்தும் அவரது வெற்றி வாய்ப்பு தொடர்பிலும் வெற்றிக்குப் பின்னர் கட்சிக்கு சாதகமான நிலை தொடர்பிலும் ஆராய்ந்தே ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்வேன். 11 ஆம் திகதி இந்த அறிவிப்பினை நான் வெளியிடுவேன் என்று கூறியுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd