ஜனாதிபதி தேர்தல் நெருங்கிகொண்டிருக்கும் நிலையில், ஜனாதிபதி வேட்பாளர்களை நியமிப்பதில், கட்சிகள் திகதி குறித்து காய்நகர்த்துகின்றன.
இந்நிலையில், மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, ஆகஸ்ட் 11ஆம் திகதியும், ஜே.வி.பி., ஆகஸ்ட் 18 ஆம் திகதியும் தங்களுடைய வேட்பாளர்களை அறிவிக்கவுள்ளது.
இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, தன்னுடைய வேட்பாளரை செப்டம்பர் 2ஆம் திகதி இடம்பெறும் கட்சி மாநாட்டிலேயே அறிவிக்கவுள்ளது.
எனினும், ஐக்கிய தேசியக் கட்சி, ஜனநாயக தேசிய முன்னணி எனும் பெயரில் புதிய கூட்டணியை அமைத்து ஆகஸ்ட் 05ஆம் திகதி வேட்பாளரை அறிவிக்கவுள்ளது.
இந்நிலையில், ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளி கட்சிகளுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில், கொழும்பில் நேற்றிரவு, ஜனாதிபத வேட்பாளர் தொடர்பில் மந்திராலோசனை நடத்தப்பட்டது. எனினும், எவ்விதமான முடிவுகளும் எட்டப்படவில்லை.
இது இவ்வாறிருக்க, சஜித் பிரேமதாசாவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிப்பதற்கு கட்சிக்குள் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
அவ்வாறு நியமித்தால், அமைச்சுப் பொறுப்புக்களில் இருந்தும் கூட்டணி மற்றும் கட்சி அங்கத்துவத்தில் இருந்தும் விலகப்போவதாக அமைச்சர்களாக ராஜித, சம்பிக்க ரணவக்க ஆகியோர் பிரதமரிடம் அறிவித்துள்ளதாக பிரதமர் அலுவலக தகவல்கள் தெரிவித்தன