மொனராகலை மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர் சுமேதா ஜி.ஜயசேனவுக்கு சொந்தமான 3 பவுன் தங்க கைவலையல், காணாமல் போயுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கோட்டை, மாதிவல-கிராமோதய மாவத்தையிலுள்ள இரண்டு மாடி வீட்டில் வைத்தே, இந்த தங்க வலையல் களவாடப்பட்டுள்ளது என மிரிஹான பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த எம்.பி, கடந்த 11ஆம் திகதியன்றே மேற்படி வீட்டில் குடிபுகுந்துள்ளார் என ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.
அந்த வீட்டில், தன்னுடைய மூத்த மகன், வேலைக்காரி மற்றும் பாதுகாப்புக்கான மூன்று பொலிஸார் மட்டுமே இருந்துள்ளனர்.
ஆகஸ்ட் 6 ஆம் திகதி பாராளுமன்ற அமர்வுக்கு சென்றிருந்த எம்.பி, வீட்டுக்கு வந்து, கீழ்மாடியில் இருக்கும் அறையில், கண்ணாடி மேசையில் இலாச்சில் கைவலையலை கழற்றிவைத்துவிட்டுள்ளார் என முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்றையதினம் மாலை 6 மணியளவில் நோயாளர் ஒருவரை பார்ப்பதற்காக வீட்டிலிருந்து வெளியேறி சென்றுள்ளார்.
அந்த சந்தர்ப்பத்தில் வீட்டுக்கு வந்த இனந்தெரியாத நபரொருவர், எம்.பியை தனக்கு தெரியும் என, கூறிவிட்டு, தன்னுடைய அம்மாவுக்கு சுகமில்லை. அதனால், 5 ஆயிரம் ரூபாய் பணம் தேவைப்படுவதாக, தன்னுடைய மூத்த மகனிடம் தெரிவித்துள்ளார் என, எம்.பி செய்துள்ள முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனந்தெரியாத நபர், கீழ் மாடியில் நின்றிருக்க, மேல் மாடிக்குச் சென்ற மூத்த மகன், 2 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்து கொடுத்துள்ளார்.
எனினும், மறுநாள் பாராளுமன்றத்துக்கு செல்வதற்கு கண்ணாடி மேசையில் இலாச்சை திறந்த போது, அதில், தன்னுடைய 24 கரட், 3 பவுன் தங்க வலையல் காணமல் போய்யுள்ளதை கண்டேன் என்றும் அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது என தெரிவித்த மிரிஹான பொலிஸார், அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.