முன்னாள் ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தன்னுடைய வேட்பாளருக்கு ஆதரவை திரட்டிக்கொள்ளும் வகையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதேச உறுப்பினர்களுடன், மஹிந்த ராஜபக்ஷ நேற்று (09) சந்திப்பொன்றை நடத்தியுள்ளார்.
இந்த சந்திப்பில், மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சிலர் பங்கேற்றனர். இந்த சந்திப்பு கொழும்பு-7 விஜயராம மாவத்தையிலுள்ள வாசஸ்தலத்தில் இடம்பெற்றது.
நாட்டின் அரசியல் நிலவரம் தொடர்பில் இதன்போது கலந்துரையாடிய மஹிந்த, கடந்த காலங்கில் இடம்பெற்ற குறைபாடுகளுக்காக மன்னிப்பு கோரியுள்ளார் என அறியமுடிகின்றது.
இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவை பெற்றுக்கொள்ளும் வகையில், பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்தனுக்கும் இடையில் அண்மையில் சந்திப்பொன்று இடம்பெற்றது என செய்திகள் வெளியாகிருந்தமை குறிப்பிடத்தக்கது.