இந்த வருடத்தில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படமாட்டாது என, ஜனாதிபதி காரியாலய தகவல்கள் மேற்கோள்காட்டி, சர்வதேச இணையத்தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அரசியலமைப்பின் 19ஆவது திருத்தமானது சபாநாயகர் கைச்சாத்திட்ட அன்றைய தினத்திலிருந்தே அமுலாகும். அவ்வாறு கைச்சாத்திட்டமை இன்றைய தினத்தில் என்றால், இன்றிலிருந்து 5 வருடங்களுக்கு மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி பதவியிலிருக்கவேண்டும் என, சட்ட வல்லுநர்களிடமிருந்து ஆலோசனை கிடைக்கப்பெற்றுள்ளது.
அதனடிப்படையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, உயர்நீதிமன்றத்திடம் மீண்டுமொரு தடவை விளக்கம் கேட்கவுள்ளார் என அறியமுடிகின்றது.
தன்னுடைய பதவிக்காலம் என்போது நிறைவடைகின்றது என்பது தொடர்பில், உயர்நீதிமன்றத்திடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஏற்கெனவே வினவியிருந்தார். இந்நிலையிலேயே மீண்டுமொரு தடவை வினவவுள்ளார் என அந்த செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், சபாநாயகர், 19ஆவது திருத்தத்தில் கைச்சாத்திடும் நாளிலிருந்து பதவிக்காலம் ஆரம்பமாகிறது என்றால், அவருக்கான பதவிக்காலம் 5 வருடங்கள் கிடைக்குமா? என, எதிர்க்கட்சிகள் கேள்வியெழுப்பியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.