2015ஆம் ஆண்டு இடம்பெற்ற, ஜனாதிபதி தேர்தலில் 90 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் ஒரு புதிய அரசியல் யாப்பிற்கு ஆதரவாக வாக்களித்திருந்த நிலையில் அந்தப் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் ஒரு பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டு புதிய அரசியலமைப்பிற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜனநாயகம் மற்றும் தேர்தல் கண்காணிப்பு கொள்கை அதிகாரி ரிக்கார்டோ செலரி மற்றும் அரசியல் வர்த்தகம் மற்றும் தொடர்பாடல்களுக்கான பிரதி தலைவர் ஆன் வாகியர் சட்டர்ஜி தலைமையிலான குழுவினர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை நேற்று கொழும்பில் சந்தித்து கலந்துரையாடியபோது, இரா.சம்பந்தன் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
1994 ஆம் ஆண்டு முதல், நாட்டு மக்கள் தொடர்ச்சியாக 25 வருடங்களாக நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு ஆதரவாகவே தேர்தல்களில் வாக்களித்துள்ளதாகவும், இந்தப் பின்னணியில் மற்றுமொரு ஜனாதிபதி தேர்தலை நடத்துவது மக்கள் ஆணையை மீறும் செயல் எனவும் அவர் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளிடம் தெளிவுபடுத்தினார்.
இவ்வாறான ஒரு சூழலில், மக்கள் ஆணையை மீறும் இந்த நடவடிக்கையில் பங்கேற்பதா, இல்லையா என்பதும், தேர்தல் நடைமுறையானது நியாயபூர்வமானதா இல்லையா என்பதுமே தற்போதை சிக்கல் எனவும், இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
தற்போது நாட்டிற்கு முக்கிய தேவையாக உள்ளது ஒரு ஜனாதிபதி தேர்தல் அல்ல எனவும், மறாக ஒரு புதிய அரசியல் யாப்பு ஒன்றை உருவாக்குவதே தற்போதைய தேவை எனவும், ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளிடம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறியுள்ளார்.