ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் தொடர்பில் பல்வேறு சர்ச்சைகள் தொடர்கின்ற நிலையில், சிலர் தனது தந்தையின் பெயரை விற்பனை செய்ய ஆரம்பித்துள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ள, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, தந்தை செய்த காரியங்கள் மிகவும் அபாயகரமானவை எனவும் எச்சரித்துள்ளார்.
இராணுவத்தினர் தொடர்பில் அவதானம் செலுத்துவதாக ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு ஆட்சியாளர்களும் தெரிவிப்பதாகவும் எனினும், அவ்வாறு அவதானம் செலுத்தியிருந்தால் நாட்டில் தீவிரவாதம் உருவாகியிருக்காது எனவும் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர், சஜித் பிரேமதாஸ் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படாவிட்டாலும், கட்சிக்குள் அவருக்கான ஆதரவு அதிகரித்துள்ள நிலையில், அவரே வேட்பாளராக நியமிக்கப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், சஜித் பிரேமதாஸ தான் ஜனாதிபதியானால் தந்தையின் வழியில் சேவைகளை தொடரவுள்ளதாக தெரிவித்து வருகின்றார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில், மறைமுகமாக சஜித் பிரேமதாஸவை சாடிய சரத் பொன்சேகா, அவரது கருத்துக்களை நம்பக்கூடாது எனவும் வலியுறுத்தினார்.
“தந்தையரின் பெயர்களை இன்று விற்பனை செய்ய ஆரம்பித்துள்ளனர். தனது தந்தை செய்ததையே செய்ய சிலர் முயற்சிக்கின்றனர். பலர் யுத்த வீரர்கள் தொடர்பில் அவதானம் செலுத்துவதாக தெரிவிக்கின்றனர். அப்படி செலுத்தியிருந்தால் இந்த நாட்டில் தீவிரவாதிகள் உருவாகப்போவது இல்லைத்தானே?
“தனது தந்தை செய்ததையே தானும் செய்யப்போவதாக தெரிவிக்கின்றனர். தந்தை 1980களில் தீவிரவாதிகளுககு ஆயுதங்களை வழங்கினார். இந்திய இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்துமாறே உத்தரவிட்டார். எனினும் அவர்கள் அந்த ஆயுதத்தை வைத்து எம்மைத் தாக்கினார்கள்.
“அந்த ஆயுதங்கள் மூலமாவே மாங்குளத்தை கைப்பற்றினார்கள். கொக்குவில், ஆனையிறவையும் இதன் மூலமே கைப்பற்றினார்கள். ஆகவே தந்தை செய்ததையே தான் செய்வேன் எனக் கூறும்போது கொஞ்சம் அச்சமாக உள்ளது.
1990ஆம் ஆண்டு 600 பொலிஸ் அதிகாரிகளை தீவிரவாதிகளிடம் சரணடையுமாறு தந்தை கூறினார். அந்த 600 பேரும் கொலை செய்யப்பட்டார்கள். இதுவும் தந்தையின் செயலே. இதுத் தொடர்பில் மக்கள் சிந்திக்க வேண்டும்.” எனத் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.