ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொள்கைகள் மற்றும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் பொதுஜன பெரமுன கட்சியினருடன் இணக்கப்பாடு எட்டப்படும் பட்சத்தில் இணைந்து செயற்படுவது தொடர்பில் சிந்திக்க முடியுமென, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுன கட்சியில் இருக்கின்றவர்கள், சுதந்திரக் கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களே எனவும், எனவே இணைந்து செயற்பட முடியுமெனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
பெலியத்த பிரதேசத்திற்கு விஜயம் செய்திருந்த மஹிந்த அமரவீர ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
“கோட்டாபய ராஜபக்ச வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். எதிர்காலத்தில் அவருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு எதிர்ப்பார்க்கின்றோம். பிரதானமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இந்த நாட்டை முன்னோக்கிக் கொண்டுச் செல்வதற்கே எதிர்ப்பார்க்கின்றது. அதற்கான வேலைத்திட்டங்களை நாங்கள் திட்டமிட்டுள்ளோம். இவற்றை அவர்களிடம் சமர்ப்பித்து அவர்களது வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஆராய்ந்து, அதன் பின்னர் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானிப்போம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.