web log free
May 20, 2024

விவசாய பண்ணை உரிமையாளர் உள்ளிட்ட நான்கு பேரை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

புத்தளம் - வண்ணாத்துவில்லு விவசாய பண்ணையின் உரிமையாளர் உள்ளிட்ட நான்கு பேரையும் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் வண்ணாத்துவில்லு பகுதியில் உள்ள பண்ணையொன்றில் வைத்து 100 கிலோகிராம் வெடிபொருட்கள் மற்றும் 100 டெட்டனேட்டர்கள் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டிருந்தது.

சம்பவம் தொடர்பில் இன்று கைது செய்யப்பட்ட பண்ணையின் உரிமையாளர் கொழும்பிற்கு அழைத்துவரப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

கடந்த காலங்களில் நாடு முழுவதிலும் பதிவான புத்தர் சிலைகள் உடைக்கப்படுகின்ற சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிஸ் விசாரணைக் குழுவொன்றினால் இந்த வெடிப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

புத்தர் சிலைகளை உடைக்கும் சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நேற்று முன்தினம், வண்ணாத்துவில்லு, மங்களபுர, கரடிப்புல் போன்ற பிரதேசங்களுக்கு சென்றிருந்தனர்.

இதன்போதே, குறித்த விவசாய பண்ணை சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வெடிப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன. மீட்கப்பட்ட வெடிப்பொருட்களை சோதனைக்கு உட்படுத்த விசேட குழுவொன்றும் வண்ணாத்துவில்லு பிரதேசத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறெனினும், எதற்காக குறித்த வெடிப்பொருட்கள் மறைத்துவைக்கப்பட்டிருந்தன என்பது தொடர்பில் இதுவரை உறுதியான தகவல்கள் கண்டறியப்படவில்லையென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் 3 விசேட குற்றப் புலனாய்வு குழுக்கள் விசாரணையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Last modified on Wednesday, 11 September 2019 01:33