web log free
May 13, 2024

சிறப்பு அறிக்கையாளர் அரசாங்கத்திற்கு பாராட்டு

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள, மத அல்லது நம்பிக்கை சுதந்திரம் குறித்த ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர் அகமத் ஷாஹீட், வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவை அமைச்சில் நேற்று சந்தித்தார்.

2015 ஆம் ஆண்டில் இலங்கையால் ஐ.நா.வின் சிறப்பு நடைமுறைகள் பணிப்பாணையாளர்கள் அனைவருக்கும் வழங்கப்பட்ட நிலையான அழைப்பிற்கு பதிலளிக்கும் விதமாக சிறப்பு அறிக்கையாளர் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

கடந்த நான்கு ஆண்டுகளில் சிறப்பு நடைமுறைகள் கட்டளை வைத்திருக்கும் ஒருவர், நாட்டிற்கு மேற்கொண்ட 10 ஆவது விஜயம் இதுவாகும்.

ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச சமூகத்துடன் திறந்த வெளிப்படையான மற்றும் ஆக்கபூர்வமான உரையாடலில் ஈடுபடுவதற்கான அரசாங்கத்தின் கொள்கைக்கு ஏற்ப, சிறப்பு நடைமுறைகள் பணிப்பாணையாளர்கள் பலரின் வருகைகளுக்கு வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் மாரப்பன தெரிவித்தார்.

சிறப்பு அறிக்கையாளரரின் விஜயத்தின் போது இலங்கை அரசு தனது முழுமையான ஒத்துழைப்பை அவருக்கு வழங்கும் எனஅமைச்சர் உறுதியளித்தார்.

அகமத் ஷாஹீட், இந்த அழைப்பிற்காக அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்த அதேவேளை, குறிப்பாக ஈஸ்டர் ஞாயிறு சம்பவங்களுக்குப் பின்னர் நாடு எதிர்கொள்ளும் சிரமங்கள் மற்றும் உணர்ச்சி ரீதியான விடயங்களை புரிந்தகொள்வதாக தெரிவித்தார்.

ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னர், புகலிடக் கோரிக்கையாளர்கள் மற்றும் அகதிகளின் காவல் மற்றும் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்க அரசாங்கம் எடுத்துள்ள முறையை அவர் பாராட்டியுள்ளார்.

சிறப்பு அறிக்கையாளர் வடக்கு, கிழக்கு, வடமேற்கு மற்றும் மத்திய மாகாணங்களில் பல பகுதிகளுக்கு விஜயம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மதத் தலைவர்கள், சிவில் சமூகத்தின் பிரதிநிதிகள் மற்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஆகியோரையும் அவர் சந்திக்கவுள்ளார்.