ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் மிக முக்கிய மான சந்திப்பொன்று எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (27) இடம்பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் தேர்தல்களை முன்னிட்டு இரண்டு கட்சிகளும் இணைந்து கூட்டணி அமைப்பது தொடர்பில் தீர்க்கமான முடிவுகளை எடுக்கும் வகையில் இந்த பேச்சுவார்த்தை அமையும் என, எதிர்பார்க்கப்படுகின்றது.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஆகியவற்றுக்கு இடையில் பல்வேறு கட்டங்களாக பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றிருந்தன.
எனினும், கூட்டணி தொடர்பான இறுதி முடிவு எட்டப்பட்டிருக்கவில்லை.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ தலைமையில் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும ஆகியோர் இந்த கலந்துரையாடலில் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்ப்பில், பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர எம்.பி, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர எம்.பி. மற்றும் பாராளுமன்ற உறுப்பினரான லசந்த அழகியவண்ண ஆகியோர் இந்த கலந்துரையாடலில் பங்கேற்கவுள்ளதாக அறியமுடிகின்றது.