எந்தவொரு சந்திர்ப்பத்திலும் தான் ஒரு கட்சிக்கு சார்பாக கருத்து தெரிவிக்கவில்லை என கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
இத்தாலியில் இருந்து வருகைதந்த ஆயர்கள் குழாமுடன் இன்று காலை கண்டி தலதா மாளிகைக்கு சென்ற ஆண்டகை இதனை தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த ஆண்டகை, உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்துவது எமது பொறுப்பு என கூறினார்.
இந்த தாக்குதலின் பின்னணியில் உள்ள சூத்திரதாரிகள் குறித்து முறையான விசாரணைகள் நடைபெறுவதில் திருப்தி இல்லை என்றும் கர்தினால் தெரிவித்தார்.
பலரும் பல விடயங்களை செய்வதாக கூறினாலும் அதிகாரத்தில் இருப்பவர்கள் சில விசாரணைகளை நடத்த வேண்டும் என கூறியதோடு, தற்போது அனைவரின் கவனமும் அதிகாரத்தை பெறுவதற்காக திரும்பியுள்ளது எனவும் கூறினார்.
எனவே தேர்தலுக்கு முன்னர் இது சம்பந்தமாக ஏதேனும் நடக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ள கர்தினால், ஆட்சியில் இருப்பவர்கள் தொடர்ந்தும் அமைதியை கடைபிடித்து வருவதாகவும், ஜனாதிபதி கூட சாதகமாக பதிலை வழங்காதிருப்பதாக தெரிவித்தார்.