மட்டக்களப்பு சீயோன் தேவாலய தாக்குதல்தாரியான மொஹமட் அஸாத்தின் உடற்பாகங்களை, மட்டக்களப்பு கள்ளியங்காடு இந்து மயானத்தில் புதைத்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸார் கண்ணீர்புகை, தடியடிப் பிரயோகம் மேற்கொண்டதால், மட்டக்களப்பில் நேற்று(27) மாலை பதற்றமான சூழல் ஏற்பட்டது.
அந்த பதற்றம் இன்னும் தணியவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்ற.
தற்கொலைதாரியின் உடற்பாகங்களைப் பொதுமயானத்தில் அரச செலவில் புதைக்குமாறு மாவட்டச் செயலாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டமைக்கு அமைவாக, கள்ளியங்காடு பொதுமயானத்தில், மேற்படி தற்கொலைதாரியின் உடற்பாகங்கள் புதைக்கப்பட்டன.
இது தொடர்பாக பிரதேச மக்களுக்கு, நேற்று (27) மாலை தெரியவந்ததையடுத்து குறித்த மயானத்துக்கு முன்னால், பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன், பொதுமக்கள் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், தற்கொலைதாரியின் உடற்பாகங்களைத் தோண்டி எடுக்குமாறும் கோஷமெழுப்பினர்.
மேலும் ஆர்ப்பாட்டக்காரர்கள், மட்டக்களப்பு- கல்லடி வீதியை மறித்து டயர்களை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், அவ்வீதி வழியான போக்குவரத்து இரண்டு மணித்தியாலங்கள் தடைப்பட்டதுடன், வாகன நெரிசலும் ஏற்பட்டிருந்தது.
இதனையடுத்து ஆர்ப்பாட்ட இடத்துக்கு இராணுவத்தினரும் பொலிஸாரும் சென்று ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைந்து செல்லுமாறு கூறியுள்ளனர். எனினும் தற்கொலைதாரியின் உடற்பாகங்களை அகற்றுவதாக மாவட்டச் செயலாளர் உத்தரவாதம் தந்தால் மட்டுமே கலைந்துச்செல்வதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறியுள்ளனர்.
இதனையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்புகை, நீர்தாரைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாகவும் இதனால் பெண்கள் உட்பட பலர் காயமடைந்துள்ளனர் என்றும் தெரியவருகிறது.
இதன்காரணமாக அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டதுடன், பிரதான வீதியில் பொலிஸாரும் இராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.