ஜனாதிபதிக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இடையில் இன்று நடைபெற்ற கலந்துரையாடல் எந்தவித தீர்மானமும் இன்றி நிறைவு பெற்றதாக தெரிகிறது. கூட்டமைப்பின் உயர்மட்ட தலைவர்கள் யாரும் இதில் கலந்து கொள்ளவில்லை. அதனால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இடைநடுவில் வெளியேறிவிட்டதாக அறியமுடிந்தது.
இரா.சம்பந்தன், த.சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் இன்றைய சந்திப்பில் கலந்துகொள்ளவில்லை.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் மாவை சேனாதிராசா, சி.சிறிதரன், சீ.யோகேஸ்வரன், சார்ள்ஸ் நிர்மலநாதன், சாந்தி சிறிஸ்கந்தராசா, சிவமோகன், ஈ.சரவணபவன், சிறிநேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முக்கிய விவகாரத்தை பேசும் கூட்டத்தில் கூட்டமைப்பின் முக்கிய தலைவர்கள், கலந்துகொள்ளாத அதிருப்தி ஜனாதிபதியிடம் தெரிந்ததாக கூட்டமைப்பு எம் பி ஒருவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, வடக்கில் படையினர் வசமிருக்கும் காணியை விடுவிப்பது தொடர்பிலான இயலுமை குறித்து, ஒக்டோபர் 1ஆம் திகதிக்கு முன்னர் அறிக்கையிடுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இராணுவத்துக்கு பணித்துள்ளார் என அறியமுடிகின்றது