வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகோரி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களும் பல்வேறு அமைப்புக்களும் இணைந்து இன்று (30) காலை 10 மணியளவில் கல்முனையில் பாரிய பேரணி முன்னெடுக்கப்பட்டது.
கல்முனை தரவைப்பிள்ளையார் ஆலயத்தில் பூசைகளுடன் ஆரம்பமான வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் பேரணி கல்முனை பிரதான வீதியூடாக சென்று கல்முனை வடக்கு பிரதேச செயலகம் வரை சென்று மகஜர் கையளிக்கப்பட்டது.
இந்த மகஜர் கையளிப்பு நிகழ்வில் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் செயலாளர் ரீ.ஜெ.அதிசயராஜ் மனித உரிமை ஆணைக்குழுவின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் ஏ.எல்.இஸ்ஸதீன் ஆகியோரிடம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினால் கையளிக்கப்பட்டது.
இப்போராட்டத்தில் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் உறவினர்கள் பல்கலைக்கழக மாணவர்கள் பொது அமைப்புக்கள் பொதுமக்கள் என பலரும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் விடுதலைக்காக கலந்துகொண்டார்கள். காணாமல் ஆக்கப்பட்டோர் தமது ஆதங்கங்களை ஊடகங்கள் மூலம் வெளிப்படுத்தினர்.
அதில் 10 வருடங்களாக போராட்டத்தை முன்னேடுத்து வருகின்றோம். இதுவரை 35 பேருக்கு மேல் எம்மோடு இணைந்து வெயில் பனி மழை பாராது தமது உறவுகள் இன்று வருவார் நாளை வருவார் எதிர்பார்போடு உயிரை விட்டுள்ளார்கள்.