web log free
April 27, 2024

மாணவிகளை வீடுகளுக்கு அழைக்க தடை

கல்வி தொடர்பாக மாணவிகளை பேராசிரியர்கள் தங்கள் வீடுகளுக்கு அழைக்க தடை விதித்து சுற்றறிக்கை அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. 

பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவிகளை தங்கள் வீடுகளுக்கு பேராசிரியர்கள் வரவழைப்பதும் அவர்களை தவறாக பயன்படுத்துவதும் நடைபெறுவதாக அவ்வப்போது புகார்கள் எழுந்துள்ளன.

இந்த நிலையில் கல்வி தொடர்பாக மாணவிகளை பேராசிரியர்கள் தங்கள் வீடுகளுக்கு அழைக்க சென்னை பல்கலைக்கழகம் தடை விதித்துள்ளது.

இதுகுறித்து அந்த பல்கலைக்கழகத்தின் பதிவாளர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கல்வி தொடர்பாக மாணவிகளை பேராசிரியர்களோ, விரிவுரையாளர்களோ தங்கள் வீடுகளுக்கு அழைக்கக் கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது. 

மாணவிகளை பேராசிரியர்கள் வெளியில் அழைத்துச் செல்வதோ, வெளியில் தங்குவதோ கூடாது. அவ்வாறு கல்வி தொடர்பாக தங்க வேண்டுமானால் பல்கலைக்கழகத்தில் முன் அனுமதி பெற வேண்டும்

சென்னை பல்கலைக்கழகத்தில் பாலியல் புகார்களை விசாரிக்க பேராசிரியர் ரீடா ஜான் தலைமையில் தனி குழு அமைக்கப்பட்டுள்ளது.

எனவே பாலியல் புகார்களை விசாரணை குழு, பதிவாளர், துணை வேந்தர் ஆகியோரிடம் மாணவிகளும் பேராசிரியைகளும் தெரிவிக்கலாம் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இது போல் அறிவிப்பு வெளியிடுவதால் மாணவிகள் தவறாக வழிநடத்தப்படுவது தடுக்கப்படும் என்றும் இது போன்ற அறிவிப்புகள் ஆராய்ச்சிப் படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு பேருதவியாக இருக்கும் என்றும் கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Last modified on Saturday, 31 August 2019 04:19