இரண்டு, மூன்று வாரங்களாக விமர்சனங்களை முன்வைத்துகொண்டிருந்த சஜித் அணியினரும், ரணில் அணியினரும், இன்னும் இரண்டொரு வாரங்களுக்கு விமர்சனங்களை முன்வைக்காது இருப்பதற்கு தீர்மானித்துள்ளனர் என அறியமுடிகின்றது.
அதற்கு ரணிலும் சஜித்தும் வெள்ளைக்கொடி காண்பித்துள்ளனர். ஆகையால் இரண்டுவார காலங்களுக்கு போர்நிறுத்த உடன்படிக்கையொன்றும் பெயரளவில் அமுலில் உள்ளது.
கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும், பிரதித் தலைவர் சஜித் பிரேமதாவும் பங்கேற்ற கலந்துரையாடலில், கட்சியின் சிரேஷ்ட அமைச்சர்கள் ஐவர் அடங்கிய குழுவொன்றும் பங்கேற்றுள்ளது. இதன்போதே மேற்கண்டவாறு தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த ஐந்து அமைச்சர்களும், ரணில் விக்கிரமசிங்கவை தனியாக சந்தித்து, சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்குமாறு வலியுறுத்தியுள்ளனர்.
ஏற்படுத்தப்பட்ட புரிந்துணர்வின் அடிப்படையில், இரண்டுவாரங்கள் நிறைவடையும் வரையிலும் கூட்டங்களை நடத்தாமல் இருக்கவும், விமர்சனங்களை முன்வைக்காமல் இருப்பதற்கும், ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் வாய்த்திறக்காமல் இருப்பதற்கு தீர்மானமொன்றை எட்டியுள்ளனர்.
அதுதொடர்பிலான முன்னேற்றம் குறித்து எதிர்வரும் 6ஆம் திகதி மீண்டுமொரு தடவை அந்த சிரேஷ்ட அமைச்சர்கள் ஐவரும், கூடி கலந்துரையாடவுள்ளனர் என அறியமுடிகின்றது
இது இவ்வாறிருக்க, ரணில், சஜித், ராஜித்த மற்றும் ஹர்ஷ ஆகியோருக்கிடையில், வியாழக்கிழமை இரவு, அலரிமாளிகையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.