web log free
November 27, 2024

மகேந்திரனை நாட்டுக்கு அழைக்கும் ஆவணம் கையளிப்பு

 

மத்திய வங்கியில் இடம்பெற்ற முறிகள் மோசடி தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் முதலாவது பிரதிவாதியான , மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை சிங்கப்பூரிலிருந்து இலங்கைக்கு நாடுகடத்துவதற்கான ஆவணத்தை சட்ட மாஅதிபர் சமர்பித்துள்ளார்.

21 ஆயிரம் பக்கங்களுக்கும் அதிக பக்கங்களை கொண்ட ஆவணம் அடங்கிய நாடுகடத்துவதற்கான கோரிக்கையை சட்ட மாஅதிபர் , வௌிநாட்டலுவல்கள் அமைச்சு மற்றும் நீதி அமைச்சு ஆகியவற்றிற்கு இன்று மாலை சமர்ப்பித்துள்ளார்.

நாடுகடத்தல் சட்டத்திற்கு அமைய, ஏதேனும் ஒரு நாட்டில் தங்கியுள்ள அல்லது வதிவிடமாக கொண்ட சந்தேகநபர் அல்லது குற்றவாளியை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான கோரிக்கையை சமர்பிப்பதற்கு முன்னர் , சில நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும் எனவும், அதன் பின்னர் வௌிநாட்டலுவல்கள் அமைச்சு மற்றும் நீதி அமைச்சினூடாக நாடு கடத்துவதற்கான கோரிக்கையை வழங்க வேண்டும் என சட்ட மாஅதிபரின் இணைப்பதிகாரி , அரச சிரேஷ்ட சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக 21 ஆயிரம் பக்கங்களுக்கும் அதிக பக்கங்களை கொண்ட ஆவணங்களின் பகுதிகளை தனித்தனியாக மேல் நீதிமன்றத்தால் சான்றுபடுத்தப்பட்டதன் பின்னர் , அவற்றை சிங்கப்பூருக்கு அனுப்புமாறு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

குற்றவாளியான அர்ஜுன மகேந்திரனை கைது செய்ய, மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றம், கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் ஆகியவற்றால் பிறறப்பிக்கப்பட்ட பிடியாணைகள் மற்றும் குற்றப் புலனாய்வு பிரிவினரால் சர்வதேச பொலிஸார் ஊடாக வழங்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை ஆகியவற்றையும் குறித்த ஆவணத்தில் இணைத்துள்ளதாகவும் அரச சிரேஷ்ட சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன கூறியுள்ளார்.

அர்ஜுன மகேந்திரன் உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக சட்ட மாஅதிபரால் கடந்த ஜூன் மாதம் 28 ஆம் திகதி மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Last modified on Monday, 02 September 2019 16:45
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd