ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க முன்வைத்த கோரிக்கையை, ஜே.வி.பியின் தலைவரும், அடுத்த ஜனாதிபதி வேட்பாளருமான அனுர குமார திஸாநாயக்க எடுத்த எடுப்பிலேயே நிராகரித்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இரத்துச் செய்வதற்கான, அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தை, ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பாராளுமன்றத்தில் முன்வைக்குமாறு பிரதமர் ரணில் கோரிக்கை விடுத்துள்ளார்
அந்த திருத்தத்தை முன்வைத்தால் தானும் ஆதரவளிப்பேன் என ரணில் தெரிவித்துள்ளார்.
அதற்கு பதிலளித்துள்ள அனுரகுமார திஸாநாயக்க, ” ஜனாதிபதி முறைமையை இரத்துச் செய்வதற்கான திருத்தம் தேவையாயின் அதனை ஆளும் தரப்பின் ஊடாக கொண்டுவாருங்கள், அதற்கு நாங்கள் ஆதரவு தருகின்றோம்” என பதிலளித்துவிட்டாராம்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, ரணில் விக்கிரமசிங்க ஆகஸ்ட் மாதம் 26ஆம் திகதி சந்தித்திருந்தார். அவருடன் அமைச்சர் ரவி கருணாநாயக்கவும் சென்றிருந்தார்.
அந்த சந்திப்புக்கு பின்னரே அனுரகுமார திஸாநாயக்கவிடம் மேற்கண்டவாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார் என அறியமுடிகின்றது.
இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் ஜே.வி.பியும் போட்டியிடுகின்றது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கான யோசனையை பிரதான கட்சிகள் எவையும் முன்வைக்கவில்லை. ஜே.வி.பி மட்டுமே ஏற்கனவே, முன்வைத்துள்ளது. மக்களின் சக்தியை எதிர்பார்த்திருக்கும் ஜே.வி.பி, ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர், 20ஆவது திருத்தத்தை பாராளுமன்றத்தி்ல் முன்வைக்காது என, ஜே.வி.பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், அக்கட்சியின் அரசியல் சபை உறுப்பினருமான கே.டீ.லால் காந்த தெரிவித்துள்ளார்.