அரசியலில் சதா எதிரிகள் இல்லாவிட்டாலும், சிலர் சதா காலமும் எதிரிகளாக ஆகிவிடுகின்றனர். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 68 ஆவது மாநாடு கொழும்பு சுகததாச உள்ளரக அரங்கில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது.
இந்த நிலையில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான நிலைப்பாடு, கட்சியின் எதிர்கால அரசியல் திட்டம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்பில் நடைபெற்ற அந்த மாநாட்டுக்கு பெருந்திரளானோர் வந்திருந்தனர்.
சுதந்திரக் கட்சியின் காப்பாளர்களாக, முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவும், மஹிந்த ராஜபக்ஷவும் உள்ளனர்.
அவ்விருவரில், கட்சியின் மாநாட்டுக்கு சந்திரிக்கா அம்மையார் மட்டுமே வந்திருந்தார், மஹிந்த ஐயா வரவில்லை. கட்சியின் மாநாட்டுக்கு, ஐக்கிய தேசியக் கட்சியைத் தவிர, ஏனைய சகல கட்சிகளுக்கும், கட்சியின் காப்பாளர்கள் உள்ளிட்ட ஆலோசகர்களுக்கும் அழைப்பிதழ்கள் அனுப்பிவைக்கப்பட்டிருந்தன என, கட்சி அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.