ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தன்னுடைய நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி, பாராளுமன்றத்தை ஏற்கனவே ஒத்திவைத்து, சிக்கலில் மாட்டிக்கொண்டிருந்தார்.
அந்த சிக்கலுக்கு மேலும் ஒருபடி சென்றிருக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி மைத்திரிக்கு சாட்டையடி கொடுப்பதை போல, பாராளுமன்றத்தில் நேற்று (4) உரையாற்றினார்.
ஜனாதிபதித் தேர்தல் முடிந்தவுடன் பாராளுமன்றத்தைக் கலைப்பது தொடர்பில் பாராளுமன்றமே முடிவெடுக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதன்போது தெரிவித்தார்.
எதிர்வரும் டிசம்பர் மாதம் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படவிருப்பதாலேயே 2020ஆம் ஆண்டுக்கான முழுமையான வரவு-செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்காது முதல் காலாண்டுக்கான கணக்குவாக்கறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதனால் அரசாங்க நிதி எந்த விதத்திலும் மோசடியாகப் பயன்படுத்தப்படாது எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.
பிரதமர் கேள்வி நேரத்தில் ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும் போதே இதனை கூறினார்.
2020ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை சமர்பிக்க நடவடிக்கை எடுக்கப்படுகின்றதா? அவ்வாறு இல்லையென்றால் கணக்குவாக்கறிக்கையை சமர்பிப்பதற்கு திட்டம் இருக்கின்றதா?.
அத்துடன் இடைக்கால கணக்கு அறிக்கையை சமர்பிப்பதன் மூலம் அரசாங்கத்தின் வருமானம் இல்லாது போகும் என்பதுடன் சரியாக செலவு தொகையை ஒதுக்காமையினால் அரச நிதி முறையற்ற வகையில் பயன்படுத்தப்படுவதற்கு இடமளிக்கப்படும் என்பதனை அறிவீர்களா?. என பிமல் ரத்னாயக்க வினவியிருந்தார்.
அத்துடன், பொதுத் தேர்தல் நடத்தப்பட பின்னர் அமைக்கப்படும் புதிய அரசாங்கத்தினாலும் 2020 ஏப்ரல் 30ஆம் திகதிக்கு முன்னர் வரவு செலவு திட்டத்தை சமர்பிக்க முடியாது போகும் என்பதுடன் அந்த வருடத்தின் இரண்டாவது காலாண்டிலும் மேலும் இடைக்கால கணக்கு அறிக்கையை கொண்டு வரும் நிலைமை ஏற்படும்.
இதனால் அரச நிதி முறையற்ற வகையில் பயன்படுத்தும் நிலைமை ஏற்படும் என்பதுடன் பொருளாதார வீழ்ச்சி நிலைமை ஏற்படும் என்பதனை ஏற்றுக்கொள்கின்றீர்களா என்றும் தனது கேள்வியில் கேட்டிருந்தார்.