2020 இல் தேர்ந்தெடுக்கப்படும் ஜனாதிபதி, அதிகாரம் இல்லாதவர் என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருக்கும் நிலையில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, மற்றுமொரு கருத்தை தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளரை நிறுத்தும் என தயாசிறி ஜயசேகர அறிவித்துள்ளார்.
அதுதொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவுக்கு அறிவித்துள்ளார் என்று ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் வீரகுமார திஸாநாயக்க எம்.பி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி போட்டியிடும் என, கட்சியின் மத்தியக் குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரமே மஹிந்த தேசப்பிரியவுக்கு இவ்வறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் யார்? களமிறக்கப்படவுள்ளனர் என்பது தொடர்பில், அடுத்த கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என வீரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.