சிசெரியன் மூலம் பிறந்த சிசுவை கைவிட்டுவிட்டு, தாயொருவர் வைத்தியசாலையிலிருந்து தப்பிச்சென்றுள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
நாவலப்பிட்டிய வைத்தியசாலையில் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக நாவலப்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த மாதம் 31 ஆம் திகதியன்று, வயிற்றுவலி காரணமாக, அனுமதிக்கப்பட்ட பெண்ணே இவ்வாறு தப்பியோடியுள்ளார்.
நாவலப்பிட்டிய கடியஞ்சேனை பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட இரண்டு குழந்தைகளின் தாய், நாவலப்பிட்டிய மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
1ஆம் திகதி சிசெரியன் மூலம் குழந்தை பிரசவிக்கப்பட்டுள்ளது. அக்குழந்தையும் தாயும் வாட்டில் அனுமதிக்கப்பட்டனர்.
இரண்டு குழுந்தைகளின் தாயான அந்தப் பெண், தன்னுடைய விண்ணப்பத்தின் பிரகாரம், வங்கியிருந்து கடன் பெற்றுக்கொள்ளவேண்டும் என்பதனால், அதற்கு அனுமதியளிக்குமாறு வைத்திய நிர்வாகத்திடம் அனுமதி கோரியுள்ளார்.
தான் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும், அது தொடர்பிலான விவரங்கள் அடங்கிய ஆவணத்தை வைத்தியசாலை நிர்வாகத்திடம் கையளித்திருந்தார்.
அதனடிப்படையில், கடந்த 6ஆம் திகதியன்று வைத்தியசாலை விட்டு வெளியேறி சென்றுவிட்டார்.
அங்கிருந்து திரும்பவே இல்லை.
இந்நிலையில், அவர் வழங்கிய விலாசத்தின் ஊடாக தேடிபார்த்த போது, வாடகைக்கு இருந்த வீட்டிலேயே அவர் குடியிருந்துள்ளார் என அறியமுடிகின்றது.
அந்த வீட்டிலிருந்தும் அந்தப் பெண் தன்னுடைய ஏனைய இரண்டு குழந்தைகளுடன் தப்பிச்சென்றுள்ளார் என கண்டறியப்பட்டுள்ளது.
அதனையடுத்து, மேற்படி விவகாரம் தொடர்பில் வைத்தியசாலை பொலிஸாரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டதை அடுத்து, பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.