வயம்ப பல்கலைக்கழகத்தில், பகிடி வதைக்கு எதிரான மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தினர் என்றக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட சிரேஷ்ட மாணவர்கள் 12 பேரையும் குளியாப்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
முதலாம் வருட மாணவர்கள் மீதே இவ்வாறு தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. குறிப்பிட்ட சீருடையை அணிந்துவருமாறு முதலாம் வருட மாணவர்களுக்கு, சிரேஷ்ட மாணவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். எனினும், முதலாம் வருடத்தைச் சேர்ந்த 30 மாணவர்கள் மட்டும் சாதாரண உடைகளில் வந்து, விரிவுரைகளில் கலந்துகொண்டிருந்துள்ளனர்.
அவர்களில் பலர் பகிடி வதைக்கு உள்ளாக்கப்பட்டனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவர்களில் மூவர் தங்களுடைய மோட்டார் சைக்கிள்களில் சென்று, இரவு உணவை உட்கொண்டுவிட்டு திரும்பிக்கொண்டிருந்த வேளையிலேயே, பல்கலைக்கழக வளாகத்துக்குள் வைத்தே தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
தாக்குதல்களுக்கு உள்ளாகி, மூன்று வாரங்கள் கடந்த நிலையிலும், சிரேஷ்ட மாணவர்களுக்கு எதிராக எவ்விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. இதனையடுத்து, மேற்படி விவகாரம், பொலிஸ் மா அதிபர் மற்றும் பொலிஸ் ஆணைக்குழுவின் கவனத்துக்கு கொண்டுச் செல்லப்பட்டதை அடுத்து, அந்த 12 பேரும் கைது செய்யப்பட்டனர்.