ஆஸ்திரேலியாவில் முதியவர் ஒருவர் மிதிவண்டி ஓட்டிக்கொண்டிருந்தபோது, தன்னை பறந்து தாக்கவந்த பறவையிடமிருந்து தப்பிக்க முயன்றபோது விபத்தில் சிக்கி இறந்தார்.
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரத்துக்கு அருகிலுள்ள பூங்கா ஒன்றின் வேலியில் மிதிவண்டி மோதியதில் தலையில் காயமடைந்த 76 வயதான அந்த முதியவரின் உயிரை காப்பாற்றுவதற்கு மருத்துவர்கள் எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை.
ஆஸ்திரேலியாவை பொறுத்தவரை, இளவேனிற்காலத்தில் மேக்பை எனும் இந்த வகை பறவைகளின் தாக்குதலால் மிதிவண்டி ஓட்டுபவர்கள், பாதசாரிகள் ஆகியோருக்கு காயங்கள் ஏற்படுவது சாதாரணமான விடயம் என்றபோதிலும், மிகவும் அரிதாகவே உயிரிழப்பை ஏற்படுத்தக் கூடிய சம்பவங்கள் நிகழ்கின்றன.
இந்த பூங்கா அமைந்துள்ள பகுதியில் ஏற்கனவே மேக்பை தாக்கும் சம்பவங்கள் நடந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஐரோப்பாவிலும் மேக்பை எனும் பெயரை கொண்ட பறவை உள்ளது. அதே பெயரை கொண்டிருந்தாலும், ஆஸ்திரேலியாவில் காணப்படும் மேக்பை வேறு வகையை சேர்ந்தது.
பல ஆண்டுகளாக சிட்னி நகரின் ஒரு பகுதியில் மக்களை அச்சுறுத்தி வந்த அபாயகரமான மேக்பை பறவையொன்றை இம்மாத தொடக்கத்தில் வனத்துறை அதிகாரிகள் சுட்டுக்கொன்ற சம்பவம் சர்ச்சையை உண்டாக்கியது.
சுட்டுக்கொல்லப்பட்ட மேக்பை தாக்கியத்தில் பலர் காயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக, துரத்திய மேக்பை-யின் தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்காக ஓடியபோது ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக ஆஸ்திரேலியன் பிராட்காஸ்டிங் கார்பொரேஷன் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த நபரின் இறப்பிற்கு காரணமான மிகப் பெரிய மேக்பை பறவையை கொல்வதற்கு எழுந்த கோரிக்கையை அப்போது அதிகாரிகள் நிராகரித்தனர். ஆஸ்திரேலியாவின் சட்டப்படி, மேக்பை பாதுகாக்கப்பட்ட பறவையாக நடத்தப்பட்டு வந்தாலும், சூழ்நிலைக்கு ஏற்றவாறு உள்ளூர் அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க முடியும்.