முல்லைத்தீவுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று விஜயம் செய்யவுள்ள நிலையில் அங்கு இரண்டு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாபுலவில் நிலமீட்பிற்காக போராட்டம் மேற்கொண்டுவரும் மக்கள், தமது காணிகளை விடுவிக்கக் கோரி 697 ஆவது நாளினை கடந்து போராடிவருகின்றார்கள்.
கடந்த ஆண்டு 2018 ஜனவரி மாதத்தில் ஒருதொகுதி காணி விடுவிக்கப்பட்டும் இதுவரை மக்களின் ஏனைய காணிகள் விடுவிக்கப்படாத நிலையில் தொடர்ச்சியாக போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றார்கள்.
இன்று (21) முல்லைத்தீவுக்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வடக்கில் ஒருதொகுதி காணிகளை விடுவிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கேப்பாபுலவு மக்கள் தங்கள் காணிகளை விடுவிக்ககோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை இன்று முன்னெடுக்கவுள்ளார்கள்.
முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரிக்கு வருகை தரும் ஜனாதிபதியின் கவனத்தினை ஈர்க்கும் வகையில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக கேப்பாபுலவு போராட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் போராட்டம் 684 நாட்களைக் கடந்து தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில், ஜனாதிபதியின் கவனத்தினை ஈர்க்கும் வகையில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளார்கள்.