கொழும்பு, கிங்ஸ்பரி ஹோட்டலில் தற்கொலைத் தாக்குதல் நடத்திய தற்கொலைதாரியான அசாம் மொஹமட் முபாரக் என்பவரின் தலையின் பாகங்களை, பொரளை கனத்தையின் புதைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் ரங்க திஸநாயக்க, உத்தரவிட்டார்.
திம்பிரிகஸ்யாய பிரதேச செயலாளருக்கே மேற்கண்டவாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. புதைப்பதற்காக, அந்த தலையை திம்பிரிகஸ்யாய பிரதேச செயலாளருக்கு ஒப்படைக்குமாறு, கொழும்பு பிரதான நீதிமன்ற வைத்தியருக்கு நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளார்.
இந்த தலைத்தொடர்பிலான விசாரணைகள் நிறைவடைந்துள்ளன என குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தனர். அதனையடுத்தே மேற்கண்டவாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபரான அஹமது மொஹமது ஆர்ஷான் என்பவரை, எதிர்வரும் 2ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இந்த சந்தேகநபர், தாக்குதல்கள் தொடர்பில், மற்றுமொரு சந்தேகநபரின் கையடக்க தொலைபேசியின் ஊடாக, இணையத்தளங்களின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட தகவல்களின் பரிமாற்றங்கள் குறித்து, இன்னும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என, குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தனர்.