இலங்கையில் மீண்டுமொரு தடவை அரசியல் நெருக்கடி நிலைமை ஏற்படக்கூடுமென அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியானதன் பின்னர், நெருக்கடி அதிகரித்துள்ளதென அறியமுடிகின்றது.
இதற்கிடையில் நேற்றும் இன்றும் நடந்தவற்கை ஒரே பார்வையில் பார்ப்போம். நேற்றிரவு 10 மணிமுதல், இன்றுமாலை 6 மணிவரையிலும், ஜனாதிபதி, அலரி மாளிகைகள் மற்றும் பாராளுமன்றத்தில் இடம்பெற்றவற்றில் சில துளிகள்….
1.ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனுக் கோரப்பட்டு விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியானதுடன் அரசியல் குழுப்பம் ஆரம்பமானது.
2.ஒருவாரத்துக்குப் பின்னரே ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என, ஐ.தே.கவின் பொதுச்செயலாளர் அமைச்சர். அகில விராஜ் காரியவசம் அறிவித்தார்.
3.அதனடிப்படையில் ஐக்கிய தேசியக் முன்னணியின் கூட்டம் இன்றிரவு 6 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது,
அதற்கிடையில்
1.ஓடோடி சென்ற மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து, அரசியல் நெருக்கடி நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்தார். தாமரை கோபுரம் தொடர்பில், தனது அரசாங்கத்தின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை மஹிந்த வன்மையாக கண்டித்தார்.
2.அதிகாலையில் சென்ற ரணில் விக்கிரமசிங்க, மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து, விசேட அமைச்சரவைக் கூட்டத்தை கூட்டுமாறு கேட்டுக்கொண்டார்.
3.மாலை 3 மணிக்கும் விசேட அமைச்சரவைக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டது.
4.பாராளுமன்றமும் இன்றுக்காலை 10.30க்கு கூடியது.
5.கேள்விநேரத்தின் போது, எழுந்த ஒன்றிணைந்த எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, “ஜனாதிபதி அவர்களே!” என சபாநாயகரை விளித்தார். அதனை கடுமையாக கண்டித்த கருஜயசூரிய, பாராளுமன்றத்தை விளையாட்டுத்திடலாக மாற்றவேண்டாம் என்றார்.
6.வாக்குவாதங்களின் போது எழுந்த ஒன்றிணைந்த எதிரணியின் எம்.பியான சந்திம வீரக்கொடி, “ நாட்டில் அரசியல் சிக்கல் நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது. பஸ்களில் ஆட்களை ஏற்றி அமைச்சுகளுக்கு கொண்டுவந்து, அவசர, அவசரமாக நியமனங்கள் வழங்கப்படுகின்றன: இதற்கிடையில் அவசர அமைச்சரவைக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அப்படியாயின் பாராளுமன்றம் கலைக்கப்படுமா என வினவினார்.
7.அதற்கு பதிலளித்த சபாநாயகர் கருஜயசூரிய அது, என்னுடைய வேலையில்லை என்றார்.
8.சபையின் பிரதான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர், மக்கள் வங்கி திருத்த சட்டமூலத்தின் மீது திருத்தங்கள் முன்வைக்கப்பட்டன. எதிர்க்கட்சி எம்.பிகளான, தினேஸ், பிமல் மற்றும் சுனில் ஆகியோரினால் முன்வைக்கப்பட்ட திருத்தங்களை அரசாங்கம் நிராகரித்தது.
9.அதனையடுத்து, நிதியமைச்சர் மங்கள சமரவீர வாக்கெடுப்பை கோரினார். வாக்கெடுப்பில் பெரும்பான்மை வாக்குகளினால் அந்த திருத்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது.
10.சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான விமல் வீரவன்ச எம்.பி, ஜனாதிபதிக்கு தூக்கம் வராவிட்டால் ஏதாவது குளிசையை போட்டுக்கொண்டு தூங்கட்டும், வீட்டுக்குப் போகப்போகின்றோம் என்ற கவலையை விட்டுவிட்டு, ரணில் வீட்டுக்குப் போகவேண்டும். இருவரும் இணைந்து அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்தக் கூடாது என்றார்.
11.இதற்கிடையில், பாராளுமன்றத்தில் அரசியல் கட்சிகள் சிலவற்றுக்கு இடையில் மிக இரகசியமான கலந்துரையாடல்கள் சில இடம்பெற்றன.
12.நாட்டுக்கு வெளியே இருக்கும் ஆளும் தரப்பு உறுப்பினர்கள் சகலரையும், உடனடியாக நாட்டுக்குத் திரும்புமாறு அழைப்பு விடுத்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர், யாரென்பதை எதிர்வரும் 25ஆம் திகதி அறிவிக்கவுள்ளதாக அறிவித்தார்.
மாலையில்....................
1.3 மணிக்கு நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்துக்கு முன்னர், ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்றக் குழுக்கூட்டம், அலரிமாளிகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்றது.
2.ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி தேர்தல் முறைமையை இல்லாதொழிப்பதற்கு முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளை உடனடியாக கைவிடுமாறு சஜித் அணியினர் வலியுறுத்தினர்.
3.இதனால், சஜித் அணியினருக்கும் ரணில் அணியினருக்கும் இடையில் அலரிமாளிகையிலேயே கடுமையான வாக்குவாதங்கள் ஏற்பட்டன.
4.மங்கள சமரவீரவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் நேருக்கு நேராக, கடுமையான வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டமையால் அலரிமாளிகை அதிர்ந்துள்ளது.
5.அலரிமாளிகையிலிருந்து இடைநடுவிலேயே வெளியேறிய சஜித் அணியினர், நேரடியாக ஜனாதிபதி மாளிகைக்கு சென்று, அங்கு காத்திருந்தனர்.
ஜனாதிபதி மாளிகையில்.............
1.3 மணிக்கு ஆரம்பமாகவிருந்த விசேட அமைச்சரவைக் கூட்டம் 3.45க்கே ஆரம்பமானது.
2.ஆளும் தரப்பினரின் கோரிக்கைக்கு அமைவாக அமைச்சரவையை, அவசரமாகக் கூடியதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அறிவித்தார்.
3.விசேட அமைச்சரவைக் கூட்டம், கூட்டப்பட்டமைக்கான விளக்கத்தை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்வைத்தார்.
4.நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதற்கும் அதுதொடர்பிலான விசேட அமைச்சரவைப் பத்திரத்தையும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்வைத்தார்.
5.அரசியலமைப்பின் 20ஆவது திருத்தமாகவே, அந்த அமைச்சரவைப் பத்திரத்தை பிரதமர் முன்வைத்தார்.
6.சஜித் அணியினர் அதற்கும் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
7.அமைச்சர்களான மங்கள, மனோ, ஹக்கீம், பாட்டலி சம்பிக்க ரணவக்க, மற்றும் மலிக் ஆகியோரும், பிரதமரின் யோசனைக்கு கடுமையான எதிர்ப்பை முன்வைத்தனர்.
8.பிரதமர் ரணிலுடன் அமைச்சர்களான ராஜித்த சேனாரத்ன, ரவி கருணாநாயக்க ஆகிய இருவர் மட்டுமே ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர்.
9.ஐக்கிய தேசிய முன்னணியின் கூட்டம், 6 மணிக்கு அலரிமாளிகையில் மீண்டும் ஆரம்பமானது.