ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் போட்டியிலிருந்து தான் விலகிக்கொள்ளப் போவதாக, சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார்.
இதனையடுத்து, கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவுகின்றது.
இந்த போட்டியின் வெற்றி, தோல்வி, எதிர்வரும் புதன் கிழமை 25ஆம் திகதி தெரியவரும்.
மூவருக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னரே, கருஜயசூரிய மேற்கண்ட தீர்மானத்தை எட்டியுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அது தொடர்பில், தன்னை சந்தித்த பௌத்த தேரர்களிடமும் கருஜயசூரிய தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்றக் குழுக்கூட்டமும், கட்சியின் செயற்குழுக்கூட்டமும் எதிர்வரும் 25ஆம் திகதி மீண்டும் கூடவுள்ளது.
அந்தக் கூட்டத்தில் பெரும்பான்மை ஆதரவு கிடைக்கும் நபரே, ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கப்படுவார்.
பாராளுமன்றக்குழுக் கூட்டத்தில் கிடைக்கும் அங்கீ்காரத்துக்கு, கட்சியின் செயற்குழுவில் ஒப்புதல் பெற்றுக்கொள்ளப்படும்.
பாராளுமன்றக் குழுவில் சஜித் பிரேமதாஸவுக்கும், செயற்குழுவில் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பெரும்பான்மையான ஆதரவு இருப்பதாக அறியமுடிகின்றது.
தன்னுடைய ஆதரவை மென்மேலும் அதிகரித்து கொள்வதற்காக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, செயற்குழுவுக்கு புதிய உறுப்பினர்கள் இணைத்துக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என அறியமுடிகின்றது.
எனினும், தனக்குத் தெரியாமல் புதிய உறுப்பினர்கள் எவரும், செயற்குழுவில் இணைத்துகொள்ளப்படமாட்டார்கள் என ஐ.தே.கவின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.